சென்னை: திட்டமிட்டபடி பாமக பொதுக் குழுவை நடத்திக் கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது , நீதிக்கும் அறத்துக்கும் கிடைத்த வெற்றி” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை (ஆக.9) காலை 11.00 மணிக்கு நடைபெறவிருக்கும் பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.திட்டமிட்டபடி பாமக பொதுக்குழுவை நடத்திக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்திருக்கிறது. இது நீதிக்கும் அறத்துக்கும் கிடைத்த வெற்றி.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு மாமல்லபுரம் கான்ஃபுளுயன்ஸ் அரங்கில் நாளை காலை 11,00 மணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழு கூட்டம் எனது தலைமையில் நடைபெறும். பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து நாளையக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுப்போம். உங்கள் அனைவரையும் சந்திப்பதற்காகவும், ஜனநாயக முறையில் விவாதிப்பதற்காகவும் காத்திருக்கிறேன். வாருங்கள் சொந்தங்களே” என்று பாமகவினருக்கு அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னதாக, அன்புமணி தலைமையில் நடைபெறும் பாமக பொதுக் குழுவுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே அண்மைக் காலத்தில் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளது. பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி விட்டு அவரை செயல் தலைவராக நியமித்தத்தோடு மட்டுமல்லாமல் இனிமேல் நான் தான் பாமகவுக்கு தலைவராக இருப்பேன் என்றும் ராமதாஸ் அறிவித்தார்.
பொதுக்குழு மூலம் உரிய விதிகளின்படி தேர்வு செய்யப்பட்ட என்னை யாரும் தலைவர் பதவியில் இருந்து நீக்க முடியாது எனவும் அன்புமணி தெரிவித்தார். பாமகவில் இரு அணிகளாக பிரிந்து தற்பொழுது செயல்பட்டு வருகின்றனர். அன்புமணி தலைமையிலான பாமக நாளை மாமல்லபுரத்தில் பொதுக் குழு கூட்டம் நடைபெறும் என அன்புமணி ராமதாஸ் மற்றும் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர். இந்தப் பொதுக் குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறி கட்சியின் பொதுச் செயலாளர் முரளி சங்கர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரிடம் தனியாக பேச வேண்டி உள்ளதால், இருவரையும் தன்னுடைய அறைக்கு நேரில் வர கூற முடியுமா என இரு தரப்பு வழக்கறிஞரிடமும் நீதிபதி கேட்டார். அன்புமணி தரப்பு வழக்கறிஞர் இதை ஏற்றுக் கொண்டார்.
பின்னர், மாலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறையில் அன்புமணி ஆஜரானார். அப்போது, பாமக நிறுவனர் ராமதாஸ் காணொலி வாயிலாக ஆஜரானார். இருவரிடமும் விசாரணை முடிந்த நிலையில், அன்புமணி தலைமையில் நடத்தப்படும் பொதுக் குழுவுக்கு தடையில்லை உத்தரவுப் பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம், ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது. இது, ராமதாஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.