சென்னை: ராமதாஸும், அன்புமணியும் ஒரே இடத்தில் அமர்ந்து பேசி ஒரு முடிவை வெளியிட வேண்டும். அப்படிப்பட்ட நல்ல சூழ்நிலை உருவானால் பாமக பழையபடி வீறுகொண்டு, எழுச்சியுடன் செயல்படும் என பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, “பாமக தமிழகத்தில் வலிமையான கட்சி. இப்போது கட்சியில் ஏற்பட்ட குழப்பத்தால் என்னைப்போலவே, கட்சியினர் அனைவரும் மன உளைச்சலில் உள்ளனர். இது எல்லாம் பழையபடி சுமுகமாக மாறவேண்டும். இதற்கான தீர்வு என்னவென்றால், இருவரும் ஒரே இடத்தில் அமர்ந்து பேசி ஒரு முடிவை வெளியிட வேண்டும். அப்படிப்பட்ட நல்ல சூழ்நிலை உருவாகும். பாமக பழையபடி வீறுகொண்டு, எழுச்சியுடன் செயல்பட இருவரும் இணைந்து பேசி செயல்பட வேண்டும். இதுவே கட்சியினரின் கோரிக்கை. கொறடாவை மாற்ற ஒரு மனு கொடுத்துள்ளனர். ராமதாஸும் ஒரு கடிதம் கொடுத்துள்ளார். இன்னும் ஓராண்டு மட்டுமே பதவிகாலம் உள்ளதால் கொறடா பதவியில் எந்த மாற்றமும் வராது.
மாற்றி மாற்றி இருவரும் நிர்வாகிகளை நியமிப்பது மேலும் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும். ராமதாஸ் பட்டிதொட்டியெங்கும் சென்று, சோறு தண்ணி இல்லாமல் அலைந்து திரிந்து கட்சியை பலமான இயக்கமாக உருவாக்கியவர், அவர் இல்லாமல் கட்சி இல்லை. அதேபோல அன்புமணியை நாங்கள் எங்களின் முகமாக அடையாளப்படுத்தியுள்ளோம். இருவரும் பிரிந்துகிடத்தால் கட்சிக்கு நலிவுதான் ஏற்படும். எனவே இருவரும் இணைந்து கட்சியை வலுப்படுத்த வேண்டும்.
பாமகவின் குழப்பத்துக்கு எந்த கட்சியும் காரணம் இல்லை. எந்தக் கட்சியையும் நாம் குறைசொல்லக் கூடாது. மாற்றுக் கட்சி சொல்லி எங்கள் கட்சி ஏற்றுக்கொள்ளுமா என்ன? இப்போதைய பிரச்சினைக்கு முக்கிய தலைவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்தால்தான் இதற்கு தீர்வு வரும். எனக்கு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதய பாதிப்பு, முதுகு தண்டுவட பிரச்சினை எனக்கு உடல் ரீதியாக பல பிரச்சினைகள் உள்ளன. எனவே அதற்காக நான் சிகிச்சையெடுத்து வருகிறேன்” என்றார்.