சென்னை: பாமகவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிப்பதற்காக கட்சி தலைவர் அன்புமணி, டெல்லியில் முகாமிட்டுள்ளார். தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ் – தலைவர் அன்புமணி இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தந்தையும், மகனும் பரஸ்பரம் கடும் குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர். இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, ‘கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிவிட்டேன். கட்சியின் நிறுவனர், தலைவராக நானே செயல்படுவேன். அன்புமணி செயல் தலைவராக வேண்டுமானால் இருக்கலாம்’ என்று ராமதாஸ் அறிவித்தார். அன்புமணி இதற்கு பதிலடியாக, ‘பொதுக்குழு உறுப்பினர்களால் முறைப்படி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட என்னை தலைவர் பதவியில் இருந்து யாரும் நீக்க முடியாது. தேர்தல் ஆணையத்திலும் கட்சியின் தலைவர் அன்புமணி என்றுதான் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்னை நீக்க பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு’ என்று அறிவித்தார்.இந்த நிலையில், அன்புமணி கடந்த 29-ம் தேதி மாலை திடீரென டெல்லி புறப்பட்டு சென்றது, கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது.
ராமதாஸ் அணி, அன்புமணி அணி என கட்சிக்குள் பிளவை ஏற்படுத்திவிடாமல், கட்சியை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர அன்புமணி திட்டமிட்டுள்ளார். இதை ஒட்டியே, தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க டெல்லி சென்றுள்ளார். இந்த விவகாரத்தில் ஆலோசனை பெற, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி.நட்டா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
ஆனால், இத்தகவலை கட்சியினர் மறுக்கின்றனர். இதுபற்றி அவர்களிடம் கேட்டபோது, “அன்புமணி டெல்லி சென்றிருப்பது தேர்தல் ஆணையரை சந்திப்பதற்காக அல்ல. அவரது மாநிலங்களவை எம்.பி. பதவி ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதுதொடர்பான பணிகளை மேற்கொள்ளவே டெல்லி சென்றுள்ளார். கட்சியில் பிளவு ஏற்படுவதை அவர் விரும்பவில்லை. அந்த எண்ணமும் அவருக்கு இல்லை. கட்சியில் பெரும்பாலானோரின் ஆதரவு அவருக்குதான் உள்ளது. கட்சி தொடர்ந்து அன்புமணி தலைமையில் செயல்படும்” என்றனர்.