சென்னை: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின்: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நீண்ட ஆயுளோடு, தங்களது பொதுவாழ்க்கைப் பயணம் தொடர வேண்டுமென விழைகிறேன்.
செல்வப்பெருந்தகை: தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியும், பாமக நிறுவனருமான ராமதாஸுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். உங்கள் பிறந்த நாளில் நலமும் வளமும் சூழ விரும்புகிறேன். நீண்ட ஆயுளுடன், நல்ல ஆரோக்கியம், மக்கள் சேவையில் மென்மேலும் சிறந்து விளங்கிட விழைகிறேன்.
டிடிவி தினகரன்: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், மூத்த அரசியல்வாதியுமான ராமதாஸுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொண்ட கொள்கையில் துளியளவும் சமரசமின்றி அரசியல் களத்தில் பயணிக்கும் மருத்துவர் ஐயா திரு.ராமதாஸ் அவர்கள் பூரண உடல்நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், ராமதாஸை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.