விழுப்புரம்: பாமக தலைவராக ராமதாஸ் செயல்படுவார் என சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரி அடுத்த பட்டானூரில் இன்று(ஆக. 17) நடைபெற்றது. நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் முரளி சங்கர் வரவேற்றார். மேடையில் ராமதாசுக்கு அருகிலேயே இருக்கை ஒதுக்கப்பட்டு, அவரது மகள் ஸ்ரீகாந்தி அமர வைக்கப்பட்டார்.
கூட்டத்தில், கவுரவத் தலைவர் கோ.க.மணி முதல் தீர்மானத்தை வாசித்தபோது, “அங்கீகாரத்தை இழந்த பாமகவை மீண்டும் பலப்படுத்த, கட்சியின் அமைப்பு விதி 13-ல் திருத்தம் செய்து, பாமக தலைவராக ராமதாஸ் செயல்படுவார் என சிறப்பு பொதுக்குழு அங்கீகரிக்கிறது” என்றார். அப்போது, கூட்டத்தில் இருந்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் எழுந்து நின்று கரவோலி எழுப்பி ஆராவரம் செய்தனர். அவர்களை பார்த்து, இருகரம் கூப்பி ராமதாஸ் வணங்கினார்.
பின்னர், “சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைக்கும் முழு அதிகாரத்தை ராமதாசுக்கு வழங்குவது, கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடத்துவது, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாத திமுக அரசை கண்டிப்பது, தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை செய்யும் முழு அதிகாரத்தை ராமதாசுக்கு வழங்கும் வகையில் அமைப்பு விதி 35-ஐ புதிதாக உருவாக்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், “தமிழகத்தில் பூரண மதுவிலக்கு, அனைத்து ஆறுகளிலும் 5 கி.மீ., தொலைவுக்கு ஒரு தடுப்பணை, தருமபுரி – காவிரி உபரிநீர் திட்டம், காவிரி – கோதாவரி திட்டம், தமிழை கட்டாயப் பாடமாக்குவது, தமிழ் உட்பட 22 மொழிகளை ஆட்சி மொழியாக்குவது, பழைய ஓய்வூதியத் திட்டம், தமிழகத்தில் பெரிய மாவட்டங்களை பிரிப்பது, முல்லை பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்துவது, நந்தன் கால்வாய் திட்டம், கச்சத்தீவை மீட்பது, புதுச்சேரியில் நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டங்களை உருவாக்குவது, ஆசிரியர்கள் காலி பணியிடங்களை நிரப்புவது, மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுப்பது, சுங்கச்சாவடி கட்டணத்தை குறைப்பது, தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிப்பது, நெல் மூட்டைகளை பாதுகாக்க நெல் கிடங்குகள் அமைப்பது, செஞ்சிக் கோட்டையை செஞ்சியர் கோன் காடவன் கோட்டை என பெயரிட்டு அழைப்பது என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி மொத்தம் 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள்: 8 பேர் அடங்கிய ஒழுங்கு நடவடிக்கைக் குழு தயாரித்த அறிக்கையை கோ.க.மணி வாசித்தார். இதில், “கடந்த 28-12-24-ம் தேதி நடைபெற்ற சிறப்பு புத்தாண்டு பொதுக்குழுவில் ‘மைக்-கை’ தூக்கி வீசியது, பனையூரில் புதிய அலுவலகம் தொடங்கியது, கட்சியின் தலைமைக்கு கட்டுப்படாமல் பிளவுபடுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளது, சமூக ஊடகங்ளில் ராமதாஸ் உள்ளிட்டவர்களை அவதூறாக விமர்சிப்பது, தைலாபுரம் இல்லத்தில் ஒட்டு கேட்பு கருவி வைத்தது, அனுமதியின்றி பொதுக்குழு கூட்டத்தை நடத்தி ராமதாசின் புகைப்படத்தை வைத்து அவருக்கு நல்ல புத்தி கொடுங்கள் என வேண்டிக் கொண்டது, பணம் மற்றும் பதவி ஆசை காட்டி ராமதாசை சந்திக்க வருபவர்களை தடுத்து நிறுத்தியது, பசுமை தாயகம் அமைப்பை கைப்பற்றிக் கொண்டது, சென்னையில் இயங்கி வந்த தலைமை அலுவலகத்தை இடம் மாற்றம் செய்தது, ராமதாசிடம் 40 தடவை பேசியதாக பொதுவெளியில் பொய் பேசியது” என அன்புமணி மீது 16 வகையான குற்றச்சாட்டுகளை எடுத்துரைத்து, நடவடிக்கை எடுக்க ராமதாசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
ஓரே வாரத்தில் கொடுக்க முடியும்: கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸ் பேசும்போது, “ஒரு சமுதாயத்துக்கு மட்டும் 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களுக்குமானது. பாளையங்கோட்டை சிறை தவிர, தமிழகத்தில் உள்ள சிறைகளுக்கு சென்றது, ஒரு ஜாதிக்காக மட்டுமல்ல, 324 சமுதாயத்துக்காக சிறைக்கு சென்றுள்ளேன். தமிழகத்தின் எல்லா பிரச்சினைகளுக்காகவும் போராடினேன். அனைத்து ஜாதி மக்களுக்காக பாடுப்பட்டு வருகிறேன்.
அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தபோது, 10.5 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. இதில் 115 ஜாதிகள் பயன்பெறுகிறது. ஆனால், இவர்கள் அனைவரும் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளனர். உங்களுக்கும் சேர்ந்துதான் இடஒதுக்கீட்டுக்காக போராடுகிறோம். வெற்றி கூட்டணி அமைப்பதற்கான முழு அதிகாரத்தை கொடுத்துள்ளீர்கள். நீங்கள் விரும்பும் கூட்டணியை அமைப்பேன்.
10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்காக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 35 நிமிடம் பேசியும் பலனில்லை. இருக்கின்ற தரவுகள் மூலம் 10.5 சதவீத இடஒதுக்கீட்டை ஓரே வாரத்தில் கொடுக்க முடியும். செய்ய மறுக்கின்றார். ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என தட்டி கழிக்கின்றார். மற்ற மாநிலங்களில் செய்துள்ளனர், எனவே, உங்களாலும்(முதல்வர் மு.க. ஸ்டாலின்) செய்ய முடியும். நாங்கள் போராடாமல் விடமாட்டோம்” என்றார்.
மாநில அமைப்பு செயலாளர் அன்பழகன், சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சென்னையில் கடந்த 9-ம் தேதி பொதுக்குழுக் கூட்டத்தை நடத்திய அன்புமணியின் புகைப்படம், ஒரு இடத்தில் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.