விழுப்புரம்: பாமக இளைஞரணித் தலைவராக தமிழ்க்குமரனை நியமனம் செய்வதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (அக்.2) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இன்று மகிழ்ச்சியான நாள், எனது நீண்ட நாள் ஆசை நிறைவேறப்போகும் நாள். நான் அதிகம் நேசிக்கும் பிள்ளைகளில் ஒருவர் தமிழ்க்குமரன். தமிழ்க்குமரனை பாமக இளைஞரணித் தலைவராக நியமனம் செய்கிறேன். இவருக்கு ஏற்கெனவே இந்த பொறுப்பு வழங்கப்பட்டது. நான் தான் அந்த நியமனக் கடிதத்தை அவருக்கு கொடுத்தேன். உடனே இதனை தமிழ்க்குமரன், அன்புமணியிடம் போனில் கூறியுள்ளார். அதற்கு, ‘இதை ஏற்கமுடியாது, உடனடியாக நீ பொறுப்பை ராஜினாமா செய்’ என்று சொல்லியுள்ளார். நான் ராஜினாமா செய்யவேண்டாம் என சொன்னேன்.
பின்னர் சில மாதங்களில் கட்சியின் பொதுக்குழு நடந்தது. பொதுக்குழுவுக்கு வருவதற்காக தமிழ்க்குமரன் குடும்பத்துடன் வந்திருந்தார். ஆனால், தமிழ்க்குமரன் பொதுக்குழுவுக்கு வரக்கூடாது என அன்புமணி சொல்லிவிட்டார். இதனால் மனம் நொந்து அவர் திரும்பிவிட்டார்.
பின்னர் 2 மாதம் கழித்து அந்த நியமனக் கடிதத்தை கிழித்துப் போடச் சொன்னேன். அதன் பிறகு கடந்த ஆண்டு பொதுக்குழுவில் என் மூன்றாவது பேரன் முகுந்தனுக்கு இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பை வழங்கினேன். அப்போதுதான் மைக்கை தூக்கி போட்டார் அன்புமணி. இப்போது மீண்டும் தமிழ்க்குமரனை இளைஞரணித் தலைவராக்கியுள்ளேன். அவர் இந்த பொறுப்பில் சிறப்பாக செயல்படுவார்” எனத் தெரிவித்துள்ளார்
பாமக முன்னாள் தலைவரான ஜிகே மணியின் மகனான தமிழ்க்குமரனை இளைஞரணித் தலைவராக நியமிக்கும் கடிதத்தை, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரின் மகள் காந்திமதி ஆகியோர் அவரிடம் வழங்கினர்.