காஞ்சிபுரம்: “திமுக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. தங்கள் ஆட்சியின் தவறுகளை மறைத்து வெற்றி பெறலாம் என்று பாமகவுக்குள் இருக்கும் சூழ்ச்சிக்காரர்களை பயன்படுத்தி கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது” என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார்.
காஞ்சிபுரம் மாவட்ட பாமக பொதுக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் மகேஷ்குமார் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அன்புமணி ராமதாஸ் பேசியது: “சமீபத்தில் வரலாறு காணத வகையில் வன்னியர் சங்க மாநாட்டை நடத்தினோம். பத்து லட்சம் வன்னிய இளைஞர்கள் அந்த மாநாட்டில் திரண்டனர்.
‘வன்னிய சமூகத்துக்கு பெரும் துரோகத்தை திமுக இழைத்துள்ளது. உச்ச நீதிமன்றம் உரிய தரவுகளை திரட்டி வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கலாம் என்று தீர்ப்பளித்த பிறகும் அந்த இடஒதுக்கீட்டை வழங்காமல் திமுக துரோகம் செய்தது. வன்னிய சமூகத்தில் இருந்து திமுகவுக்கு ஒரு ஓட்டு கூட செல்லக் கூடாது. அதற்கான பணிகளை செய்ய வேண்டும்’ என்று அந்த மாநாட்டுக்கு வந்த இளைஞர்களிம் கூறினேன்.
அந்த மாநாட்டில் திரண்ட கூட்டம் திமுகவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. மக்கள் மத்தியில் திமுக அரசின் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தங்கள் அரசின் தோல்வியை மறைக்க பாமகவுக்குள் இருக்கும் சில சூழ்ச்சிக்காரர்களை பயன்படுத்திக் கொண்டு குழப்பத்தை உண்டாக்க திமுக முயற்சிக்கிறது. அவர்களின் எண்ணம் ஒரு போதும் வெற்றி பெறாது.
காஞ்சிபுரம் மாவட்டம் என்பது திமுகவை உருவாக்கிய அண்ணா பிறந்த மண். இந்த மாவட்டத்தில் 6 சாராய ஆலைகள் செயல்படுகின்றன. இதில் 5 ஆலைகள் திமுகவினருக்கு சொந்தமானவை. அதனால்தான் திமுக மதுவிலக்கை கொண்டு வர தயங்குகிறது. என்னை இந்த சமூகத்துக்கும், கட்சிக்கும் துரோகம் செய்வதாக கட்டமைக்க முயல்கின்றனர். அப்படி இந்த கட்சிக்கோ, சமூகத்துக்கோ துரோகம் செய்தால் அந்த நாள் என் வாழ்வின் இறுதி நாளாக இருக்கும்.
நாங்கள் வன்னியர்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு கோரவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக் கோருவதே முன்னேறாமல் இருக்கும் சமூகங்களை கண்டறியத்தான். யார் முன்னேறாமல் உள்ளனரோ அவர்கள் அனைவருக்கும் இடஒதுக்கீட்டை கொடுக்க வேண்டும். தலித் மக்களின் இடஒதுகீட்டை மேலும் 2 சதவீதம் உயர்த்த வேண்டும் என்று வன்னியர் சங்க மாநாட்டில் கூட தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்” என்றார்.
இந்த பொதுக் குழுக் கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை திருப்போரூர் பகுதிக்கு மாற்ற வேண்டும், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு மருத்துவக் கல்லூரி கொண்டு வர வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சக்திகமலாம்பாள், மாவட்டத் தலைவர் உமாபதி, நிர்வாகிகள் பொன்.கங்காதரன் உள்பட பலர் பங்கேற்றனர்.