மேட்டூர்: பாமகவில் சிக்கலான சூழ்நிலை இல்லை. பாமகவில் இரு அணிகள் இல்லை. ராமதாஸ் தலைமையில் இருக்கும் கட்சிதான் பாமக என அக்கட்சியின் எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார்.
மேட்டூரில் பாமகவின் புதிய நகர அலுவலக திறப்பு விழா, ராமதாஸ் அணியை சேர்ந்த மேற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏவும், பாமக இணை பொதுச் செயலாளருமான அருள் புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி இன்று (ஜூலை 16) திறந்து வைத்தார். தொடர்ந்து, பாட்டாளி மக்கள் கட்சியின் 37-வது ஆண்டு விழாவை முன்னிட்டு கேக் வெட்டி இனிப்பு வழங்கினார். இதில் மாவட்ட தலைவர் துரைராஜ், நகர செயலாளர் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் எம்எல்ஏ அருள் கூறும்போது, “2026-ம் ஆண்டு தேர்தலில், பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டணி வைக்கும் கட்சிதான் ஆட்சியை பிடிக்கும். பாமகவில் சிக்கலான சூழ்நிலை இல்லை. ராமதாஸ், அன்புமணி மற்றும் ஜி.கே.மணி ஆகியோர் கட்சியில் எந்தக் குழப்பமும் இல்லை என கூறியுள்ளனர். ராமதாஸ் காட்டும் வழியில் அன்புமணியும் செயல்படுவார். பாமகவில் இரு அணிகள் இல்லை. ராமதாஸ் தலைமையில் இருக்கும் கட்சிதான் பாமக.
சேலத்தில் பாமக தனியாக மாம்பழம் சின்னத்தில் 3.50 லட்சம் வாக்குகள் பெற்றது. ராமதாஸ் யாரை நியமிப்பதாக கடிதம் கொடுத்தாரோ, அவர்களே நிர்வாகிகளாக தொடர்வார்கள் என நேற்றிரவு தெரிவித்தார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.