விழுப்புரம்: பாமக செயல் தலைவர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து அன்புமணி நீக்கப்படுவதாக அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் இன்று அறிவித்தார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும், இனி அன்புமணி தனது இனிஷியலை மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம், பெயருக்குப் பின்னால் ராமதாஸ் என்றுகூட எழுதக்கூடாது என்று ஆவேசமாகக் கூறினார்.
கடந்த சில மாதங்களாகவே, ராமதாஸுக்கும் – அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அதுவும் ராமதாஸ் முகுந்தனை பாமக இளைஞரணித் தலைவராக நியமித்தது அன்புமணியை பெருமளவில் எரிச்சலூட்டியது. மேடையிலேயே இது தொடர்பாக தந்தையும் மகனும் கடும் வாக்குவாதம் செய்ய, அவர்களுக்கு இடையேயான உரசல் அம்பலமானது. அதன்பின்னர் நடந்ததெல்லாம் அனைவரும் அறிந்த மோதல்கள்.
இது உச்சகட்ட வாக்குவாதங்களை சந்தித்த நிலையில், இருவருக்கும் இடையே சமரசம் செய்ய பல்வேறு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், எதுவும் பலனளிக்காத நிலையில், அன்புமணிக்கு ராமதாஸ் ஒரு கெடு வைத்தார். அந்தக் கெடுவுக்கு அன்புமணி வளைந்து கொடுக்காத நிலையில் இன்று இந்த நீக்க நடவடிக்கை நடந்துள்ளது.
10-ம் தேதி கெடு முடிந்தது: கடந்த செப்டம்பர் 4-ம் தேதி தைலாபுரத்தில் பாமக மாநில நிர்வாக குழு கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடந்தது. அந்த கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், “அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அனுப்பிவைக்கப்பட்ட நோட்டீஸுக்கு அவர் செப் 10-ம் தேதிக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது 2-வது கெடு. இதற்கும் அன்புமணி பதிலளிக்கவில்லை என்றால், அன்புமணி மீது கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அந்தக் கெடு நேற்றே முடிந்த நிலையில், இன்று ராமதாஸ் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப, ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
இனிஷியலை மட்டுமே பயன்படுத்தலாம்… – அப்போது ராமதாஸ், “பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக அன்புமணியை பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் செயல் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்குகிறேன்.
பட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு எழுப்பிய 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி எந்த பதிலும் அளிக்கவில்லை.. இரண்டு முறை அவகாசம் தந்தும், நேரிலோ அல்லது எழுத்து பூர்வமாகவோ அல்லது கடிதம் மூலமாகவே எந்த பதிலும்அளிக்கவில்லை. எனவே அவர் 16 குற்றச்சாட்டுகளையும் ஏற்பதாக அனுமானிக்கப்படுகிறது. எனவே அன்புமணி பாமகவின் அடிப்படைஉறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குகிறேன்.
அன்புமணியுடன் சேர்ந்து செயல்பட்டவர்கள் திருந்த வாய்ப்பு தருகிறேன். அவர்கள் மீண்டும் வந்தால் பாமகவில் சேர்க்க தயாராக உள்ளேன். மூத்தவர்கள் பலர் அறிவுரை கூறியும் அன்புமணி கேட்கவில்லை. அரசியல்வாதி என்பதற்கு தகுதியற்றவர் அன்புமணி. இனி அவர், இரா என்ற இனிஷியலை மட்டும் பயன்படுத்தலாம். தனது பெயருக்கு பின்னால் ராமதாஸ் என்று அன்புமணி பயன்படுத்தக்கூடாது.” என்று கூறினார்.