சென்னை: பாமகவில் இருந்து அன்புமணியை நீக்க ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை என்றும், பாமக விதிகளுக்கு எதிரான ராமதாஸின் அறிவிப்பு என்பது கட்சியை கட்டுப்படுத்தாது என்றும் பாமக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்தார்.
இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “பாமக விதிகளின்படியும், கட்சி சட்டத்தின்படியும் கட்சி நிர்வாக பணிகள், கட்சி பணிகளை மேற்கொள்ளக் கூடிய அதிகாரங்கள், பொதுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், செயலாளர், பொருளாளருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நிறுவனருக்கு நிர்வாக பணிகளை மேற்கொள்ள அதிகாரம் வழங்கவில்லை.
பதவி நீக்கம் செய்வது, கூட்டம் நடத்துவது போன்ற எந்த முடிவுகளாக இருந்தாலும் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டு இருக்கக் கூடிய அறிவிப்பு என்பது கட்சி விதிகளுக்கு எதிரானது. ராமதாஸ் அறிவிப்பு கட்சியை கட்டுப்படுத்தாது. பாமக தலைவராக அன்புமணி தொடர்ந்து வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் கட்சி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தேர்தல் நெருங்கி வரக்கூடிய வேளையில், கட்சியின் அமைப்பு தேர்தலை நடந்த கூடிய சூழல் இல்லை. அதனால், கட்சித் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய 3 பேரின் பதவி காலத்தை 2026 ஆகஸ்ட் வரை நீட்டித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்தத் தீர்மானம் பொதுக்குழு உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழுவின் முடிவுகள் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தெரிவித்தோம். எங்களது விளக்கத்தை தேர்தல் ஆணையம் உரிய வகையில் ஆய்வு செய்து, பாமகவின் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிக் காலத்தை, பொதுக் குழுவின் தீர்மானத்தின்படி 2026 ஆகஸ்ட் மாதம் வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
அதன்படி, பாமகவின் தலைவராக அன்புமணி, பொதுச் செயலாளராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமா தொடர்கிறார்கள். இவர்களை தவிர ‘நான் தான் தலைவர், செயலாளர், பொருளாளர்’ என வெளியிடக் கூடிய அறிவிப்புகள் கட்சி விதிகளுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் எதிரானது.
ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு என்பது கட்சி விதிகளின்படியும், தேர்தல் ஆணையம் சமீபத்தில் வழங்கியுள்ள உத்தரவு அடிப்படையில் செல்லத்தக்கது அல்ல. கட்சியின் நிறுவனராக ராமதாஸ் தொடர்கிறார். அதில் எந்த மாற்றமும் இல்லை. தேர்தல் ஆணையம் முறையாக எங்களுக்கு தலைவர், செயலாளர், பொருளாளர் என்ற பதவிக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளது. பதவிக் காலத்தை நீட்டித்துள்ளது. அந்த அடிப்படையில் ராமதாஸ் அறிவிப்பு என்பது கட்சியை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது.
பாமகவின் கொள்கைகளை அன்புமணிதான் நிறைவேற்றி வருகிறார். நாங்கள் எழுப்பக் கூடிய கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல், ஆளும் கட்சி திணறி வருகிறார்கள். அன்புமணி சுற்றுப் பயணம் என்பது எழுச்சி பயணமாக அமைந்துள்ளது. கட்சியின் விதிகளின்படி நாங்கள் பணியாற்றி வருகிறோம். நாங்கள் தான் கேவியட் மனு போட வேண்டும். ஆனால், அவர்கள் போட்டுள்ளனர். அந்த மனுவில் கொடி, கட்சி சின்னம் குறித்து எதுவும் கூறவில்லை. பாமகவில் நிலவி வந்த பல்வேறு குழப்பங்களுக்கு தேர்தல் ஆணையம் மூலம் நல்ல முடிவு கிடைத்திருக்கிறது” என்றார் கே.பாலு.
ராமதாஸ் அறிவித்தது என்ன? முன்னதாக, தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நிறுவனர் ராமதாஸ், பாமக செயல் தலைவர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அறிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் கூறும்போது, “கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகளுக்கும், இருமுறை அவகாசம் அளித்தும், விளக்கம் அளிக்க தவறியதால், அவர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையானவை என முடிவு செய்யப்படுகிறது. கட்சித் தலைமைக்கு கட்டுப்படாமல் தான்தோன்றித்தனமாக செயல்பட்டுள்ளார். ‘அரசியல்வாதி’ என்ற தகுதியற்றவராகவே தன்னை நிரூபித்துள்ளார். கட்சியை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
பாமகவின் எதிர்கால வளர்ச்சிக்கு, மிகப் பெரிய குந்தகம் விளைவிக்கும் செயலாக, அவரது செயல்பாடு உள்ளதால், பாமக செயல் தலைவர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்படுகிறார். பாமகவைச் சேர்ந்தவர்கள், அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. மீறினால், அவர்கள் மீதும் கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும். அன்புமணியுடன் உள்ளவர்கள் மனம் திருந்தி வந்தால், அவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்ள தயாராகவே இருக்கிறேன்.
அன்புமணி வேண்டுமானால் தனிக் கட்சி தொடங்கலாம். எனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது. தனி மனிதனாக ராமதாஸ் எனும் நான் தொடங்கிய கட்சிக்கு உரிமை கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை.
அன்புமணியை நீக்கியதால் பாமகவுக்கு பின்னடைவு இல்லை. பயிர் வளரும்போது களையும் முளைக்கும். அன்புமணி என்னும் களையை நீக்கிவிட்டேன். பாமக வளர்ச்சி பெறும். 40 முறை என்னிடம் பேசியதாக பொய் கூறுகிறார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி வேவு பார்க்கலாம். ஆனால், தந்தையான என்னை வேவு பார்க்க ஒட்டுக்கேட்பு கருவியை அன்புமணி பொருத்தியது மோசமான செயல். ‘இரும்பு மனிதர்’ என என்னை அழைக்கப்படுவதை, கடந்த காலங்களில் தவிர்த்து வந்தேன். அந்த இரும்பு, இப்போது உருகிவிட்டது.
46 ஆண்டுகள், நான் வளர்த்த கட்சியை அழிக்க பார்க்கும்போது மனம் பொறுக்க முடியவில்லை. 324 சமுதாயங்களைச் சேர்ந்த ஊமை ஜனங்களுக்காக கோல் ஊன்றி கொண்டும் பாடுபடுவேன். அவர்களது வாழ்க்கையில் முன்னேறவும், கல்வி கிடைக்கவும் போராடுவேன். பாமகவில் செயல் தலைவர் என்ற பதவி தொடரும். இந்தப் பதவிக்கு யாரை நியமிக்க உள்ளேன் என பிறகு கூறுகிறேன். பசுமை தாயகம் தலைமை பொறுப்பில் இருந்து சவுமியா அன்புமணியை நீக்குவது குறித்து இப்போதைக்கு பேசத் தேவையில்லை. மகளை முன்னிறுத்த மகனை புறக்கணிக்கவில்லை” என்று ராமதாஸ் தெரிவித்தார்.