விழுப்புரம்: பாமகவில் இருந்து சேலம் மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அருளை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை. பாமகவில் நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், “நகை திருட்டு புகாரில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும். அஜித்குமார் மீது புகாரளித்த நிகிதா மீது மோசடி புகார் உள்ளதாக தெரியவந்துள்ளது. அஜித் மீது தாக்குதல் நடத்திய போலீஸாரை கைது செய்துள்ளனர். ஆனால் இதனை ஏவியவர்களை கைது செய்தார்களா?. நிகிதாவின் ஒரு போன் காலுக்கு இவ்வளவு செல்வாக்கு வந்தது எப்படி?. இதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாமகவில் இருந்து சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருளை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை. பாமகவில் நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது. அருள், பாமகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 5 பேருக்கும் கொறடாவாக உள்ளார், ஜிகே மணி பாமக சட்டமன்றக்குழு தலைவராக உள்ளார்.
ஜி.கே.மணி மூலம் சபாநாயகருக்கு கடிதம் கொடுத்துதான் அருளை பதவியிலிருந்து நீக்க முடியும். முதலில் நான் இதற்கு அனுமதி கொடுக்க வேண்டும். எனவே அருளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உண்டு. அருள், பாமகவின் சட்டப்பேரவை கொறடாவாகவே தொடர்வார். மேலும், அருளுக்கு நிர்வாகக்குழு உறுப்பினர், இணை பொதுச்செயலாளர் பதவிகளை வழங்கியுள்ளேன். அந்த பொறுப்புகளை அவர் சிறப்பாக கையாண்டு வருகிறார்.
இப்போது என் மனம் வேதனைப்படும் அளவு நடக்கின்றனர், எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு கட்சியை நடத்தி வருகிறேன். கட்சியை தொடந்து நானே வழிநடத்துவேன். திமுக மற்றும் அதிமுகவுடன் பாமக கூட்டணி பேசி வருவதாக கூறப்படும் தகவல்கள் அனைத்தும் வதந்திதான். செயற்குழு, பொதுக்குழு, நிர்வாகக் குழுவை கூட்டி எந்த கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
ஆகஸ்டு 10-ம் தேதி பூம்புகாரில் மகளிர் மாநாடு நடத்தவுள்ளோம். ஜூலை 10-ம் தேதி மாநாடு நடக்கும் இடத்தை பார்வையிட செல்கிறேன். இது ஒட்டுமொத்த மகளிர் மாநாடு, எனவே அனைத்துக்கட்சியை சேர்ந்த மகளிரும் பங்கேற்கலாம். அன்புமணி தொடர்பான கேள்விகளை என்னிடம் தவிர்க்க வேண்டுகிறேன்” எனத் தெரிவித்தார்