சென்னை: பாத யாத்திரை மேற்கொண்டு வரும் அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை காலம் தாமதிக்காமல் நிறைவேற்றிட அரசு முன்வர வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம், ஊதிய உயர்வு, கரோனா பேரிடர் தொற்று காலத்தில் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து சென்னையை நோக்கி பாதயாத்திரை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி 2019ம் ஆண்டு அரசு மருத்துவர்கள் முன்னெடுத்த தொடர் போராட்டத் திற்கு அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த, ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து, வழங்கிய வாக்குறுதிகளை, முதல்வரான பின்பு நிறைவேற்ற மறுத்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழக அரசிடம் கோரிக்கை மனு சமர்ப்பிக்கும் போராட்டம், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் என கடந்த நான்கு ஆண்டுகளாக மேற்கொண்ட அனைத்து வித போராட்டங்களுக்கும் துளியளவும் செவி சாய்க்காத திமுக அரசின் கவனத்தை ஈர்க்க வேறு வழியின்றி சென்னையை நோக்கி பாதயாத்திரை நடத்தும் சூழலுக்கு அரசு மருத்துவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு, டார்ச் லைட் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு தூய்மைப் பணியாளர்களே சிகிச்சை அளிக்கும் அவலம் என அடியோடு சீர்குலைந்திருக்கும் சுகாதாரத்துறையால் அரசு மருத்துவமனைகளை நோக்கி வரும் நோயாளிகளின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, இனியும் காலம் தாமதிக்காமல் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் அரசு மருத்துவர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட முன்வர வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.