கரூர்: தமிழகத்தில் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவதற்கான ஜனநாயக உரிமையை கூட திமுக அரசு மறுத்து வருவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமை கரூர் மாவட்டம் வேலுசாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், கரூர் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை நலம் விசாரிக்கவும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “இந்தச் சம்பவத்துக்கு யார் மீதும் நாங்கள் பழி சுமத்த விரும்பவில்லை. பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்பவர்களுக்கு போதுமான பாதுகாப்பை வழங்குவதற்கும், அதை உறுதி செய்வதற்கும் மாநில அரசுதான் பொறுப்பு. அது மாநில அரசின் தார்மிக பொறுப்பாகும். இதுபோல நடப்பது இது முதல் முறை அல்ல. பல சந்தர்ப்பங்களில், பாஜக கூட இதை எதிர்கொண்டுள்ளது. ஏனெனில், கூட்டம் நடத்த மாநில அரசு சரியான இடம் மற்றும் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்குவதில்லை. அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவதற்கான ஜனநாயக உரிமையை கூட திமுக அரசு மறுக்கிறது.
கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு எங்களது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உறுதுணையாக நாங்கள் இருப்போம். பாஜக மாநில தலைவர் சொன்னது போலவே உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து நீதி விசாரணை நடத்த வேண்டும். ஏற்கெனவே மாநில அரசு தனிநபர் ஆணையம் விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை” என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து கரூரில் இருந்து தவெக தலைவர் விஜய், சென்னை சென்றது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். “இந்த நேரத்தில் நான் மக்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்றுதான். அரசியலில் ஒருவர் படிப்படியாக வளர்ந்து வருவதற்கும், தனது பிரபலத்தின் மூலம் ஒருவர் அடையாளம் காணப்படுவதற்கும் வித்தியாசம் உண்டு. பிரபலத்தின் மூலம் அரசியலுக்கு வந்தவர்களுக்கு மக்கள் எதிர்கொண்டு வரும் நிலை என்ன என்பது தெரியாது. இது அவர்களின் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது” என வானதி சீனிவாசன் கூறினார்.