சென்னை: சமூக நலம், மகளிர் உரிமை துறை சார்பில் வடிவமைக்கப்பட்ட ‘தமிழ்நாடு மாநில திருநங்கையர் நல கொள்கை – 2025’-ஐ சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
சமூகநல துறை அமைச்சர் கீதாஜீவன், தலைமைச் செயலர் முருகானந்தம், துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன், கூடுதல் செயலர் வளர்மதி, இயக்குநர் சங்கீதா, மாநில திட்டக்குழு உறுப்பினர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாகுபாடு, வன்முறையின்றி திருநங்கையர் பாதுகாப்பாக வாழ்வது, தங்கள் உரிமைகளை அணுகக்கூடிய ஒரு நியாயமான, சமமான சமூகத்தை உருவாக்குவதே இதன் இலக்கு. அவர்களது அடிப்படை உரிமைகளுக்கு முன்னுரிமை, பாலின அடையாளம், சட்டப்பூர்வ அங்கீகாரம் மற்றும் பாதுகாப்பு, சமூக நீதி, பிரதிநிதித்துவம், திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, கல்வியில் சமத்துவம், சொத்துகளை வைத்திருத்தல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மருத்துவ மேலாண்மை யுடன் அறுவை சிகிச்சை முறைகளை செயல்படுத்த அரசு, தனியார் மருத்துவமனைகளில் வசதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.