சென்னை: அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றார் போல மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசு மருத்துவர்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.
இக்கோரிக்கையை நிறைவேற்றக் கோரி, கடந்த ஜூன் 11-ம் தேதி சேலம் மாவட்டம் மேட்டூரிலிருந்து சென்னை கலைஞர் நினைவிடம் நோக்கி பாதயாத்திரையை அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவரும், அரசு மருத்துவருமான எஸ்.பெருமாள் பிள்ளை தலைமையில் அரசு மருத்துவர்கள் தொடங்கினர். சென்னை தேனாம்பேட்டை அருகே வந்தபோது, அவர்களை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
இந்நிலையில், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளையிடம் விளக்கம் கேட்டு சென்னை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக அரசு மருத்துவர்கள் கூறியதாவது: திமுக ஆட்சி அமைந்ததும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என 2019-ம் ஆண்டு போராட்டத்தின் போது மு.க.ஸ்டாலின் நேரில் வந்து உறுதியளித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் கடந்த பிறகும் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.
பல்வேறு போராட்டங்களை நடத்தியும் அரசு செவிசாய்க்காததால் வேறுவழியின்றி காந்திய வழியில் பாதயாத்திரை மேற்கொண்ட மருத்துவர் பெருமாள் பிள்ளைக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.