சென்னை: பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவை ஆளுநர் பதவியில் அமர்த்த அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால், தேசிய அளவில் பாஜகவின் கவனம் தமிழகத்தின் பக்கம் திரும்பி உள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இதற்காக வியூகங்களை வகுத்து வருகிறது.
அந்தவகையில், தமிழகத்தை சேர்ந்த பாஜகவினருக்கு தேசிய அளவில் கட்சி பதவிகளை வழங்கியும், அமைச்சரவை, ஆளுநர், துணை குடியரசு தலைவர் போன்ற பதவிகளையும் பாஜக வாரி வழங்கி, தமிழகத்துக்கு ஆதரவாக இருப்பது போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், 2026 தேர்தலையொட்டி, தமிழக பாஜகவினருக்கு முக்கியத்துவம் அளிக்க தேசிய தலைமை விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. நாகாலாந்து ஆளுநராக இருந்த இல.கணேசன், கடந்த 15-ம் தேதி காலமானார்.
இதனால், அம்மாநில ஆளுநர் பதவி காலியாக உள்ளது. அதேபோல், மகாராஷ்டிரா மாநில ஆளுநராக இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன், குடியரசுத் துணை தலைவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால், மகாராஷ்டிரா ஆளுநர் பதவியும் காலியாகவுள்ளது.
இந்த இரு மாநிலங்களிலும் ஆளுநராக இருந்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், மீண்டும் தமிழகத்தில் இருந்து ஒருவரை ஏதாவது ஒரு மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்க பாஜக தேசிய தலைமை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு, ஆளுநர் பதவிக்கு தமிழக பாஜக மூத்த தலைவர்கள் பட்டியலை பாஜக தயாரித்துள்ளதாகவும், அதில் ஹெச்.ராஜா பெயர் முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிகிறது.
இதுகுறித்து தமிழக பாஜக மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘ஹெச்.ராஜா ஆளுநர் பதவிக்கு பொருத்தமானவராக இருப்பார். இதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அதுவும், மகாராஷ்டிரா மாநிலத்துக்கு ஆளுநராகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. குடியரசுத் துணை தலைவர் வேட்பாளராக நாங்கள் தமிழகத்தில் இருந்து அண்ணாமலையை எதிர்ப்பார்த்தோம். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். அதுபோல், ஆளுநர் பதவியிலும் எது வேண்டாலும் நிகழலாம்’ என்றார்.