சென்னை: எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான ஜெ.பி.நட்டா அக்.6-ம் தேதி சென்னை வரவுள்ளதாக அக்கட்சியின் தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நடிகை ராதிகாவின் தாய் கீதா ராதா மறைவையொட்டி, போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சென்று, ராதிகா, சரத்குமார் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அனைத்து மாநிலத்தைச் சேர்ந்த நிதி அமைச்சர்களும் ஜிஎஸ்டி கவுன்சிலில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவர்களின் ஒப்புதலோடுதான் இந்தியாவில் ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது. தற்போது, 5, 12, 18, 28 சதவீதம் என 4 அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரி 5, 18 என 2 அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது.
வரிவிகிதம் குறைக்கப்பட்டதால் மக்கள் நன்மை தான் அடைந்திருக்கிறார்கள். ஜிஎஸ்டி-யில் 50 சதவீதம் பங்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும். அதை நான் மறுக்கவில்லை. ஆனால், அந்த தொகையை தான், மாநிலங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு செலவிடுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஜிஎஸ்டி மறுசீரமைப்பில் அனைத்திலும் விலை குறைக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசால் ஆவினில் விலையை குறைக்க முடியவில்லை. மத்திய அரசு மக்களுக்கு விரோதமான திட்டங்களை செயல்படுத்தி வருவதாக முதல்வர் ஸ்டாலின் கூறுவது தவறு. ரேஷன் கடைகளில் மத்திய அரசு இலவசமாக பொருட்களை கொடுக்கிறது.
இது மக்கள் விரோதமா, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் மத்திய அரசு வழங்குகிறது. இது மக்கள் விரோத திட்டமா, மத்திய அரசு 37 லட்சம் விவசாயிகளுக்கு இந்த தொகையை வழங்கி வந்தது. இதனால், மத்திய அரசுக்கு நற்பெயர் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் மாநில அரசு, பல விவசாயிகளின் பெயர்களை நீக்கி, 19 லட்சமாக குறைத்துள்ளது. இதுவிவசாயிகளுக்கு தமிழக அரசு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகம்.
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகம் இருப்பது கூட கனிமொழிக்கு தெரியவில்லை என்பது, அவரது நிலையை நினைத்து எனக்கு பாவமாக இருக்கிறது. பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வரும் 6-ம் தேதி மதுரவாயல் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.
அதன்பிறகு, அங்கிருந்து புதுச்சேரி செல்கிறார். பின்னர், புதுச்சேரியில் இருந்து டெல்லி செல்கிறார். இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘பாஜகவின் தேர்தல் பரப்புரையை வரும் அக்.12-ம் தேதி மதுரையில் தொடங்குகிறோம். இந்த தேர்தல் பரப்புரையில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள்’ என்றார்.