நெல்லை: “பாஜக கொள்கை ரீதியாக எதிரி என்றால், உங்களுக்கு என்ன கொள்கை இருக்கிறது?” என்று தவெக தலைவர் விஜய்க்கு தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது, “மதுரை மாநாட்டில் அனாவசியமாக பாஜக பற்றி விஜய் பேசியுள்ளார். விஜய் முதலில் தமிழ்நாட்டு அரசியலை படிக்க வேண்டும். படித்து விட்டு கருத்தை சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கிற ரசிகர்களை பிழிந்து பணம் சம்பாதித்தை தவிர, தமிழ்நாட்டுக்கு விஜய் என்ன செய்துள்ளார்.
ஓட்டு கேட்க வேண்டும் என்றால் முதலில் தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பாஜக கொள்கை ரீதியாக எதிரி என்றால் இருக்கட்டும். உங்களுக்கு என்ன கொள்கை இருக்கிறது என கேட்கிறேன். பாஜகவை பற்றி தவறாக விமர்சனம் செய்ய வேண்டாம் என அவரை எச்சரிக்கிறேன்” என்றார் எச்.ராஜா.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, “இன்றைக்கு உலகளவில் பிரதமர் நரேந்திர மோடி புகழடைந்து கொண்டிருக்கும் போது, யாரோ ஒருவர் மிஸ்டர் பி.எம் என்று கூப்பிட்டால் மக்கள் யாரும் ரசிக்க மாட்டார்கள். அவர் மாஸ்டர் பி.எம் ஆக, உலக நாடுகளும், மக்களும் விரும்புகிற பி.எம் ஆக இருந்து கொண்டிருக்கிறார்.
விஜய் அரசியலில் புதியவர். அவர் வரவெல்லாம் நம்மை ஒன்றும் செய்யாது. இன்றைய காலகட்டத்தில் பாஜக பலம் பொருந்திய கட்சியாக வளர்ந்துள்ளது. 2026-ல் ஆளுங்கட்சியோடு போட்டி என்பது பாஜக கூட்டணிக்கு தான். தாமரை இலையில் தண்ணீர் ஒட்ட வேண்டாம். தாமரை மலரப்போகிறது, வளரப்போகிறது எல்லோரும் ஆச்சரியப்படும் அளவுக்ற்கு மலரப்போகிறது. அதை தம்பி விஜய் பார்க்கத்தான் போகிறார்.
விஜய்க்கு வசனம் எழுதிக் கொடுத்தவர், அங்கிள் மிஸ்டர் பி.எம் என்று எழுதிக் கொடுத்து விட்டார். அதைத்தான் அவர் படித்துள்ளார். பாஜக கூட்டணி பொருந்தா கூட்டணியா, பொருந்துகிற கூட்டணியா என்பது குறித்து அவருக்கு என்ன தெரியும். அவர் அரசியல் ஞானம் பெறவில்லை என்பதற்கு கச்சதீவை பற்றி பேசியதே உதாரணம். மாநாட்டில் ஒரு கொடியை ஒழுங்காக நட முடியவில்லை. ஒரு மாநாட்டை ஒழுங்காக நடத்த முடியாதவர்கள் முடியாதவர்கள் எப்படி ஆட்சியை நடத்துவார்கள்” என்றார் தமிழிசை சவுந்தரராஜன்.