திருச்சி/ தஞ்சாவூர்: சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 154-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே உள்ள அவரது சிலைக்கு மதிமுக சார்பில் நேற்று அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும், திருச்சி எம்.பி.யுமான துரை.வைகோமாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வருவாய்த் துறையினரின் கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஒரேநேரத்தில் நடைபெறும்போது வேலைப்பளு இருக்கத்தான் செய்கிறது.
ஏழை மக்களின் நலன் கருதி வருவாய்த் துறை ஊழியர்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். செப்.15-ம் தேதி திருச்சி அருகிலுள்ள சிறுகனூரில் மதிமுக நடத்தும் அண்ணா பிறந்த நாள் மாநாடு, அணி திரள்வோம், ஆர்ப்பரிப்போம், அங்கீகாரத்தை பெறுவோம் என்ற முழக்கத்துடன் நடைபெற உள்ளது.
லட்சக்கணக்கான மக்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். தமிழகமே திரும்பிப் பார்க்கும் வகையில், மறுக்க முடியாத ஒரு அரசியல் சக்தியாக மதிமுக திகழ்கிறது என்பதை உணர்த்தும் வகையில் மாநாடு இருக்கும். . இந்த மாநாட்டுக்கு எங்களது கூட்டணி கட்சிகளை அழைக்கவில்லை.
அதே நேரத்தில் கூட்டணி கட்சியினரின் ஆதரவும், நல் ஆசியும் எங்களுக்கு உண்டு. தேசிய ஜனநாயக கூட்டணியின் இலக்கு என்ன என்பதே அந்த கூட்டணியில் இருப்பவர்களுக்கு தெரியவில்லை. அவர்கள் கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைக்கவில்லை. அந்த கூட்டணியில் திடீரென சில கட்சிகள் உள்ளே வருகின்றன. சில கட்சிகள் வெளியே செல்கின்றன. எந்த காரணத்துக்காக வெளியேறுகிறார்கள் என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
ஜிஎஸ்டி குறைப்பு வரவேற்கத்தக்கது: தஞ்சாவூரில் நடைபெற்ற மதிமுக நிர்வாகி இல்ல நிகழ்ச்சிக்கு வந்த எம்.பி. துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘மத்திய அரசின் ஜிஎஸ்டி குறைப்பு வரவேற்கத்தக்கது, ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீட்டுக்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது, ஆனால் சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்கு வரி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.
மத்திய நிதி அமைச்சர் அதை பரிசீலனை செய்து வரியை குறைக்க வேண்டும். ஜிஎஸ்டியால் தமிழகத்துக்கு ஏற்படும் வரி இழப்பை சரி செய்ய அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி உதவியை வழங்க வேண்டும்.பாஜக கூட்டணி ஒற்றுமை இல்லாத, தொலைநோக்கு சிந்தனை இல்லாத கூட்டணியாக உள்ளது’’ என்றார்.