கடலூர்: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் விலகுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் எதிர்வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது தொடர்பாக நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றன. எதிர்வரும் தேர்தலை அதிமுக மற்றும் பாஜக இணைந்து எதிர்கொள்ளும் என சில முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் கடந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்திருந்த அமமுக, அந்த கூட்டணியில் இருந்து இப்போது விலகுவதாக அறிவித்துள்ளது.
புதன்கிழமை இரவு கடலூர் – காட்டுமன்னார்கோவில் பகுதியில் செய்தியாளர்களை டிடிவி தினகரன் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “2024 மக்களவைத் தேர்தலின் போது நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டுமென்ற நோக்கத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்திருந்தோம். ஆனால், வரும் 2026-ல் நடைபெற இருப்பது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல். இது தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்க கூடிய தேர்தல். இந்த தேர்தலில் அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் ஒன்று திரண்டு சரியான முதல்வர் வேட்பாளரை தருவார்கள் என்று நாங்கள் பொறுமையுடன் காத்திருந்தோம்.
நாங்கள் யாருடைய ஓரப் பார்வைக்காகவும் காத்திருக்க வில்லை, யாருக்கும் அஞ்சி செயல்படவில்லை. அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைவார்கள் என்றும், அதற்கு அம்மாவின் கட்சியை சேர்ந்தவர்கள் சரியான முயற்சியை செய்வார்கள் என்றும் எதிர்பார்த்தோம். ஆனால், அவர்கள் துரோகத்தை தூக்கி தலையில் வைத்துக் கொண்டு, ஊர் ஊராக திரிவதை பார்த்தால், அதற்கான வழியும் இல்லை, அவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பும் இல்லை என்பது புரிந்தது.
நாங்கள் அமைதி காத்தோம். ஆனால், துரோகம், தான் செய்வது சரி என்று நிலைநாட்டுவதை போல செயல்படுகிறது. கூச்சலிடுவதும், செல்கின்ற இடங்களில் எல்லாம் ஆணவம், அகங்காரத்துடனும் செயல்படுகிறது. அதை பார்த்த அமமுக தொண்டர்கள், ‘பொறுத்தது போதும் நீங்கள் முடிவு எடுங்கள்’ என என்னிடம் பல மாதங்களாக கேட்டு வருகிறார்கள். நான் பொறுமையாக இருந்தேன். உணர்ச்சிவசப்பட்டு இந்த முடிவை எடுக்கவில்லை. இது குறித்து நிதானமாக யோசித்து, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் பேசி இந்த முடிவை எடுத்தோம்.
இந்த இயக்கம் தொடங்கப்பட்டதே ஒரு சிலரின் துரோகத்தை எதிர்த்துதான். அவர்கள் திருந்துவார்கள் அல்லது திருத்துவார்கள் என நம்பி இருந்தோம். ஆனால், அதற்கான வாய்ப்பு எதுவும் இல்லை என்பது புரிந்தது. அதனால் நாங்கள் எங்கள் வழியில் செல்கிறோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விளக்குகிறோம். எங்களது அடுத்தகட்ட நகர்வு குறித்து டிசம்பர் மாதம் முடிவு செய்வோம்” என்றார்.
அண்மையில் பாஜக கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியேறி இருந்தார். தற்போது அமமுக வெளியேறி உள்ளது. பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையிலான முரண்பாடு காரணமாக அந்த கட்சி பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பயணிக்கிறதா என்பதும் தெளிவு படுத்தப்படாமல் உள்ளது. அதே நிலையில்தான் தேமுதிக-வும் பயணிக்கிறது.