புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளுநருக்கும், முதல்வருக்கும் மோதல் நீடித்து வரும் நிலையில், “கூட்டணி தொடர்பாக தேர்தலின்போது முடிவு செய்வோம். பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறும் சூழல் ஏதுமில்லை. வரும் 2026-ல் தேசிய ஜனநாயகக்கூட்டணி ஆட்சியமைக்கும்” என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனுக்கும், முதல்வர் ரங்கசாமிக்கும் இடையே சில விஷயங்களில் கருத்து வேறுபாடு மோதலானது. முதல்வர் ரங்கசாமி பரிந்துரையை ஏற்காமல் துணைநிலை ஆளுநர் தன்னிச்சையாக சீனியாரிட்டி அடிப்படையில் இருந்த டாக்டர் செவ்வேலை சுகாதாரத்துறை இயக்குநராக நியமித்தார்.
இச்சம்பவம் மோதலாக மாறியது. அதனால் கடந்த செவ்வாய்க்கிழமையன்று சட்டப்பேரவையில் இருந்து முதல்வர் கோபமாக புறப்பட்டார். முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டுமா என பாஜக அமைச்சர் நமச்சிவாயத்திடமும், பேரவைத்தலைவர் செல்வத்திடமும் கேள்வியும் எழுப்பினார்.
அதனால் முதல்வர் ரங்கசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக கட்சியினரிடம் தகவல் பரவியது. மோதல் முடிவுக்கு வராமல், ‘சட்டப்பேரவைக்கு வரப்போவதில்லை’ என முதல்வர் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டனர்.
இதனால் முதல்வர் ரங்கசாமி செவ்வாய்க்கிழமை மதியம் வீடு திரும்பினார். அதன்பின் 2-ம் நாளாக நேற்றும் பேரவை செல்லவில்லை. மூன்றாம் நாளாக இன்று காலையும் சட்டப்பேரவைக்கு முதல்வர் செல்லவில்லை. பாஜக தரப்பு இச்சூழலை கட்சி மேலிடத்துக்கு தெரியப்படுத்தியது. அதையடுத்து பாஜக மேலிடபொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா இன்று புதுச்சேரி வந்தார். அதே நேரத்தில் வீட்டில் உள்ள மைதானத்தில் டென்னிஸ் விளையாடிவிட்டு முதல்வர் ரங்கசாமி ஆரோவில் தனியார் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு வீடு திரும்பினார்.
அதற்குள் என்.ஆர்.காங்கிரஸை சேர்ந்த அமைச்சர் லட்சுமிநாராயணன், பேரவை துணைத்தலைவர் ராஜவேலு, எம்எல்ஏக்கள் ரமேஷ், லட்சுமிகாந்தன், பாஸ்கர், ஆறுமுகம், சுயேச்சை எம்எல்ஏக்கள் பிரகாஷ்குமார், பிஆர்.சிவா ஆகியோர் வீட்டில் காத்திருந்தனர். அதையடுத்து கோரிமேட்டில் உள்ள ரங்கசாமி வீட்டுக்கு மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, அமைச்சர் நமச்சிவாயம், பாஜக மாநிலத்தலைவர் ராமலிங்கம் ஆகியோர் வந்தனர்.
வீட்டின் முதல்தளத்தில் அனைவரும் ஆலோசனை நடத்தினர். முதல்வர் ரங்கசாமி தனது கருத்துகளை மேலிட பொறுப்பாளரிடம் தெரிவித்தவுடன் அதை மேலிடத்துக்கு சொல்வதாக உறுதி தந்த பிறகு செய்தியாளர்களை முதல்வர் ரங்கசாமி சந்தித்தார்.
அப்போது முதல்வர் கூறுகையில், “தேசிய ஜனநாயகக்கூட்டணி அரசு வரும் 2026 தேர்தலில் புதுச்சேரியில் வென்று ஆட்சி அமைக்கும். அதற்காக நிர்வாக நடைமுறை தொடர்பான மாற்றங்களை செய்தால் என்டிஏ அரசை அமைக்க முடியும் என ஆலோசித்து வருகிறோம்.
நிர்வாக ரீதியில் ஆளுநர், அரசு இடையே பிரச்சினை வரும். மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை பிரச்சினைகளை பேசி சரி செய்வோம். பாஜக எப்போதும் எனக்கு அழுத்தம் தந்தது இல்லை. கூட்டணி தொடர்பாக தேர்தலின்போது முடிவு செய்வோம். பிரதமர் உடன் எப்போதும் நல் உறவு உள்ளது. பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறும் சூழல் ஏதுமில்லை .மாநில அந்தஸ்தை புதுச்சேரியில் உள்ள அனைத்து கட்சியினரும் வலியுறுத்தவேண்டும். இதுதொடர்பாக பிரதமரை எப்போது வேண்டுமானாலும் சந்திப்போம்” என்றார்.
அதையடுத்து மேலிடபொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா கூறுகையில், “விரைவில் புதிய அமைச்சர் பதவியேற்பார். குடும்பத்தில் பிரச்சினை வருவதுபோல் எங்களுக்குள் வருபவற்றை பேசி தீர்ப்போம். வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெல்லும் நோக்கில் பணிபுரிகிறோம். தொகுதி பங்கீடு பற்றி தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் முடிவு எடுப்போம். வேறு யாரும் கூட்டணிக்கு வந்தால் அப்போது அதைபற்றி யோசிப்போம்.” என்றார். அதைத்தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி சட்டப்பேரவைக்கு புறப்பட்டுச் சென்றார்.