சிவகாசி: பாஜக குறித்து யாரும் தவறாகப் பேசினால் உங்களுடன் சேர்ந்து முதல் ஆளாக நான் எதிர்த்து நிற்பேன் என நிர்வாகிகள் கூட்டத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.
சிவகாசியில் பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. மேற்கு மாவட்ட தலைவர் சரவணதுரை ராஜா தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் கோபால்சாமி முன்னிலை வகித்தார்.
மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது: ஆகஸ்ட் 17-ம் தேதி திருநெல்வேலியில் நடைபெறும் மண்டல பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். தேர்தலுக்காக இந்த மாநாடு நடக்கவில்லை. எதிர்கால கட்சியின் வளர்ச்சிக்காக பூத் கமிட்டி மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் அமித் ஷா, ஜே.பி.நட்டா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். உலகத்தில் தலைசிறந்த தலைவராக மோடி உள்ளார். இந்தியா என்ற நாடு இருக்கும் வரை பாஜக தான் ஆட்சியில் இருக்கும்.
அதிமுகவில் ஜெயலலிதா இருக்கும் போது, 6 இடங்களில் பூத் கமிட்டி மாநாடுகள் நடத்தியதால் ஆட்சியை பிடிக்க முடிந்தது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு பாஜகவினர் சிறப்பாக பணியாற்ற வேண்டும். 2029-ல் அதிக பாஜக எம்.பிக்களை தமிழகத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு அனுப்புவதே நமது இலக்கு. இனி பாஜக குறித்து யாரும் தவறாக பேசினால் உங்களுடன் சேர்ந்து முதல் ஆளாக நான் எதிர்த்து நிற்பேன். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி. பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும்” இவ்வாறு அவர் பேசினார்.
அதன்பின் அவர் அளித்த பேட்டியில், “மடத்துக்குளம் எம்எல்ஏ தோட்டத்தில் சிறப்பு எஸ்ஐ கொலை, காவல் நிலையத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையில் உள்ளது. ஆனால் இதைப் பற்றி கவலைப்படாமல் முதல்வர் ‘ஓரணியில் தமிழ்நாடு’, ஆட்சியை பிடிப்போம் எனக் கூறி வருகிறார்” என்றார்.
கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர்கள் கவுன்சிலர் குமரிபாஸ்கர், பாலசுப்பிரமணியன், தொகுதி பொறுப்பாளர் கிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.