புதுச்சேரி: பாஜகவை நம்பிய சிவசேனா, அதிமுக, பிஆர்எஸ் கட்சிகளின் நிலைதான் புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கும் ஏற்படும் என இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் நாராயணா தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 2 நாள் புதுச்சேரி மாநில மாநாடு நிறைவடைந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த கட்சியின் தேசிய செயலர் நாராயணா செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:“பாஜகவை நம்பி எந்த மாநிலக் கட்சி சென்றாலும் அந்தக் கட்சியை ஒழிப்பதுதான் பாஜகவின் வேலை. மகாராஷ்டிரத்தில் சிவசேனையை ஓரங்கட்டி ஷிண்டே தலைமையிலான கட்சியை ஆதரித்து இப்போது அவரை முற்றிலும் பாஜக ஒழித்துவிட்டது. தமிழகத்தில் அதிமுகவை பிளவுபட வைத்துள்ளது. தெலுங்கானாவில் பாஜக மறைமுகமாக செயல்பட்டு வருவதால் சந்திரசேகர ராவ் தன்னுடைய மகள் கவிதாவை பிஆர்எஸ் கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்.
அதேபோன்ற நிலைதான் 2026-ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு ஏற்படும். தற்போது ஆட்சியில் சிறுபான்மையாக உள்ள பாஜக வரும் தேர்தலில் 50 சதம் இடங்களைக் கேட்டு போட்டியிடும். மீதி 50 சதம் இடங்களை ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸுக்கு அளிக்கும். தற்போது புதுவையில் இந்த இரண்டு கட்சிகளும் பொதுமக்களுக்கு விரோதமான ஆட்சியை அளித்து வருவதால் இந்த இரண்டு கட்சிகளும் தேர்தலுக்குப் பிறகு புதுவையில் காணாமல் போய்விடும். ஏனென்றால் புதுவையில் இண்டியா கூட்டணி மக்களுக்கு ஆதரவாக பல்வேறு இயக்கங்களை நடத்த உள்ளது.
கடந்த 9 ஆண்டுகளாக பாஜக தலைமையிலான மத்திய அரசு ஜிஎஸ்டி என்ற பெயரில் நாட்டை கொள்ளையடித்தது. தற்போது பல்வேறு பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது நல்ல முன்னேற்றம்தான். பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் வருவதைக் கருத்தில்கொண்டுதான் பாஜக தலைமையிலான மத்திய அரசு இதைச் செய்துள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் நாட்டில் ஜனநாயகப்பூர்வமாகச் செயல்படும் வகையில் மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநிலச் செயலராக மூன்றாவது முறையாக ஒரு மனதாக சலீம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ நாரா. கலைநாதன் அவரை அறிமுகப்படுத்தினார். கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, விவசாயிகள் அணித் தலைவர் கீதநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.