சென்னை: பாஜக, அதிமுக கூட்டணி தேமுதிகவுக்காக எதுவும் செய்யவில்லை என்றும் எனவே 2026 சட்டப்பேரவை தேர்தலில் மிகவும் வலுவான கூட்டணியை தேமுதிக அமைக்க வேண்டும் எனவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேமுதிகவில் புதிதாக நியமிக்கப்பட்ட சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், தொகுதி கண்காணிப்பாளர்கள் உடனான மண்டலவாரியான கூட்டம் சென்னையில் 3-வது நாளாக நேற்றும் நடைபெற்றது.
கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமை வகித்தார். துணை செயலாளர் எம்.ஆர்.பன்னீர் செல்வம் தலைமையில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளின் பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதில் பேசிய நிர்வாகிகள், “பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது பிரதமர் மோடியை நம்பினோம். ஆனால் அவர்கள் தேமுதிகவுக்காக எதுவும் செய்யவில்லை. அவர்களும் நம்மை ஏமாற்றி விட்டார்கள். அதேபோல் அதிமுகவின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலத்தில் அவர்கள் ஆட்சி அமைக்க தேமுதிக முக்கிய பங்காற்றியது. அப்படி இருந்தும் மாநிலங்களவை சீட் கொடுப்பதாக அதிமுக நம்மை ஏமாற்றி விட்டது.
இதனால் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு மிகவும் கவனத்துடன் வலுவான கூட்டணி அமைக்க வேண்டும். தேமுதிகவுக்கு அக்கூட்டணியில் முக்கியத்துவம் இருக்க வேண்டும். சட்டப்பேரவையில் தேமுதிக உறுப்பினர் குரல் ஒலிக்க வேண்டும்.” என்று கருத்து தெரிவித்தனர்.
தொடர்ந்து கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய பிரேமலதா, “உரிய நேரத்தில் நல்ல சிறப்பான கூட்டணி அமைக்கப்படும். அதை ஜனவரியில் நடக்க உள்ள மாநாட்டில் அறிவிப்போம். அது வரையில் கட்சியை பலப்படுத்தும் பணிகளை நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும்.
நான் பொதுச் செயலாளராக பதவியேற்ற பின் நடைபெற உள்ள முதல் மாநாட்டில் மறைந்த தலைவர் விஜயகாந்துக்கு அளித்த ஆதரவை போல் எனக்கும் ஆதரவு அளிக்க வேண்டும். மாநாட்டை வெற்றி பெற வைக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.