சென்னை: பாஜகவுடன் விஜய் மறைமுக கூட்டணி வைத்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் அனைத்தும் திமுக செய்யும் சதி என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோபாலபுரத்தில் அமைந்துள்ள காதி பவனில் சுதேசி பொருட்களை ஊக்குவிக்கும் வகையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் காதிப் பொருட்களை வாங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மணிப்பூர், குஜராத், கும்பமேளாவுக்கு அனுப்பாத மத்திய குழுவை தமிழகத்துக்கு மட்டும் பாஜக அரசு அனுப்புகிறது என முதல்வர் கேள்வி எழுப்பியிருக்கிறார். கரூருக்கு விஜய் வரும்போது ஏன் மின்சாரம் தடைபட்டது, தவெகவினர் கேட்ட இடத்தில் ஏன் அனுமதி வழங்க வில்லை, ஒரு அரசியல் கட்சி தலைவர் வரும்போது மின் விளக்குகளை அனைப்பதும், தடியடி நடத்துவதும், செருப்பை வீசுவதையும் முதல்வர் அனுமதிக்கிறாரா, சம்பவம் நடந்த அரை மணி நேரத்தில் முதல்வரால் எப்படி அங்கு புறப்பட்டு வர முடிந்தது?
இரவோடு இரவாக 40 உடல்களுக்கு பிரேத பரிசோதனை செய்தது எப்படி, இந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பாரா ஸ்டாலின். மற்ற மாநிலங்களில் உயிரிழப்பு நடந்திருக்கிறது. அங்கெல்லாம் செல்லாமல், இங்கு மட்டும் குழு வருகிறது என பேசும் முதல்வர் ஸ்டாலின், 41 உயிரிழப்புகளும் சரியானது என்கிறாரா, முதல்வர் இந்த உயிரிழப்புகளை ஒப்பிட்டு பேசுவது ஆச்சரியமாகவும், பரிதாபமாகவும் இருக்கிறது.
தவறு செய்தவர்களை காப்பாற்றுவதற்கு நாங்கள் ஒன்றும் நீதிமன்றம் கிடையாது. அரசியல் கட்சி வைத்திருக்கிறோம் அவ்வளவுதான். நீதிமன்றம் சில நேர்மையான தீர்ப்புகளையும் வழங்க வேண்டும். பாஜகவுடன் விஜய் மறைமுக கூட்டணி வைத்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் அனைத்தும் திமுக செய்யும் சதி. ஏனென்றால் திமுக இன்று மக்களின் வெகுஜன விரோதியாக மாறியிருக்கிறது. மக்களின் நன்மதிப்பை பெரிதும் இழந்துள்ளது.
இந்த நேரத்தில் திமுக ஒரு இடத்திலாவது டெபாசிட் வாங்குவார்களா என்பது தெரியவில்லை. 2011-ல் மிகப்பெரிய கூட்டணியை கருணாநிதி வைத்திருந்தார். ஆனால், அன்று ஜெயலலிதா தான் வெற்றிப் பெற்றார். கூட்டணி பலத்துடன் இருக்கிறோம் என்ற மாயையை திமுக உருவாக்கி வைத்துள்ளது. அந்த மாயை 2026-ல் மக்கள் முறியடிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
சுற்றுப்பயணம்: சட்டப் பேரவை தேர்தலையொட்டி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தை வரும் 2-ம் தேதி மதுரையில் தொடங்குகிறார். தொடக்க நிகழ்வில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பங்கேற்கிறார்.