நாமக்கல்: “பாஜகவுடன் மறைமுகக் கூட்டணியில் உள்ள திமுகவிடம் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.”என்று தவெக தலைவர் விஜய் நாமக்கல்லில் பேசினார்.
கடந்த செப்.13-ம் தேதி சனிக்கிழமையன்று தவெக தலைவர் விஜய் திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அன்று திருச்சியில் தொடங்கி அரியலூரில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். கடந்த சனிக்கிழமை நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டார்.
தொடர்ந்து இன்று (செப்.27) நாமக்கல்லில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: லாரி பாடி கட்டும் தொழிலில் இருந்து போக்குவரத்து வாகனங்கள் சார்ந்த பல தொழில்கள் செய்யும் ஊர் நாமக்கல். முட்டையின் உலகமே நாமக்கல் தான். சத்தான முட்டை கொடுக்கும் ஊர் மட்டுமல்ல. தமிழக மக்களுக்கு உணர்ச்சியூட்டும் மண்ணும் நாமக்கல் தான்.
“தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..” என்ற நாடி நரம்பெல்லாம் ரத்தம் பாய்ச்சும் வரியை எழுதியவர் ராமலிங்க அடிகளார். அவர் பிறந்த மண் இது. பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிமையைப் பெற்றுக்கொடுத்த முன்னாள் முதல்வர் சுப்பராயன் பிறந்த மண் நாமக்கல். தமிழக மக்களுக்கு உணர்ச்சியும், புரட்சியும் கொடுத்த ஊர்.
இந்த நாமக்கல்லில் தானிய சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என்று திமுக வாக்குறுதி எண் 50-ல் குறிப்பிட்டிருந்தது. கொப்பரை தேங்காயை தமிழக அரசே கொள்முதல் செய்து அதிலிருந்து தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்து நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யும் என்று வாக்குறுதி எண் 66-ல் சொல்லியிருந்தது. நாட்டுச் சர்க்கரை, வெல்லம் ரேஷனில் வழங்கப்படும் என்று வாக்குறுதி எண் 68-ல் சொல்லியிருந்தது. ஆசிரியர்கள் மட்டுமல்ல போக்குவரத்து ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிம் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தது. இத்தனையும் சொன்னார்களே; செய்தார்களா?
நாமக்கல்லில் முட்டை சேமிப்பு கிடங்கு, பாக்டீரியா, வைராலாஜிக்கல் மையம் அமைக்கும் கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது. ஆண்ட, ஆளும் கட்சிகள் அந்தக் கோரிக்கைகளை இதுவரை கண்டுகொள்ளவே இல்லை.
நாமக்கல்லில் நடந்த கிட்னி திருட்டு நாடறிந்ததுதான். அதுவும் கிட்னி திருட்டில் விசைத்தறிக் கூடங்களில் பணி புரியும் ஏழைப் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்குக் காரணம் விசைத்தறியாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இந்த அரசு ஏதும் செய்யாதது தான். வறுமையால் அவர்கள் கந்துவட்டிக் கொடுமையில் சிக்கிக் கொள்ள. அதன் தொடர்ச்சியாக கிட்னி திருட்டிலும் சிக்கியுள்ளனர். கிட்னித் திருட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் சரி, தவெக ஆட்சி அமைந்தவுடன் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்.
நான் சுற்றுப்பயணம் செல்லுமிடல்லாம் மக்கள் ஒரே ஒரு விஷயத்தைத் தான் சொல்கிறார்கள். அவர்கள் கேட்பதெல்லாம் சாலை வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி, பெண்கள் பாதுகாப்பு. இதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதைத்தான் நானும் எல்லா இடங்களிலும் மக்களுக்கு வாக்குறுதியாகச் சொல்கிறேன். கல்வி, ரேஷன் பொருட்கள் விநியோகம், தரமான குடிநீர், சாலை வசதி, போக்குவரத்து வசதி, தடையில்லா மின்சாரம், பெண்கள் பாதுகாப்பு, சீரான சட்டம் ஒழுங்கு தவெக அரசால் சரியாக வழங்கபப்டும் என்று சொல்கிறேன். எது நடமுறைக்கு சாத்தியமோ, எது உண்மையே அதை மட்டுமே நாங்கள் சொல்வோம். செய்வோம். திமுக மாதிரி பொய்யான வாக்குறுதிகளை சொல்லமாட்டோம்.
அதைவிடுத்து புதுசா சொல்லுங்க என்று சொன்னால், நம்ம சிஎம் அடிச்சுவிடுற மாதிரி, செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி அமைக்கப்படும், அமெரிக்காவுக்கு ஒத்தையடி பாதை போடப்படும், காற்றில் கல்வீடு கட்டப்படும், வீட்டுக்குள் ஏரோப்ளேன் ஓட்டப்படும் என்றெல்லாம் தான் சொல்ல வேண்டும்.
தவெக ஒரு காலத்திலும் பாசிச பாஜகவோடு ஒத்துப்போகாது. திமுகவைப் போல் பாஜகவின் மறைமுகக் கூட்டாளியாகவும் இருக்காது. அதிமுகவைப் போல் அம்மா, அம்மானு சொல்லிட்டு பொருந்தா கூட்டணி அமைப்பவர்கள் மாதிரியும் இருக்க மாட்டோம். பாஜக தமிழகத்துக்கு என்ன செய்துவிட்டது?. நீட் தேர்வை ஒழித்துவிட்டதா? தமிழகத்துக்கு தேவையானதை எல்லாம் செய்துவிட்டதா? அப்புறம் ஏன் இந்த சந்தர்ப்பவாத கூட்டணி என்று எம்ஜிஆர் தொண்டர்கள் கேட்கிறர்கள்.
பாஜக – அதிமுக கூட்டணியை மக்கள் ஏற்கமாட்டார்கள்.ஆனால், திமுகவின் பாஜகவுடனான மறைமுக கூட்டணி பற்றி ஜாக்கிரதையாக இருங்க மக்களே. திமுகவுக்கும் பாஜகவுக்கும் அண்டர்வேர்ல்டு டீலிங் இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். திமுகவுக்கு ஓட்டுப்போட்டால் அது பாஜகவுக்கு ஓட்டுப் போட்ட மாதிரி. அவர்கள் வெளியில் அடித்துக் கொள்வதுபோல் தெரியும். ஆனால் உள்ளுக்குளே!. வேண்டாம் மக்களே. ஜாக்கிரதை. யோசிங்க மக்களே.!
அதனால்தான், 2026-ல் தவெக – திமுக இடையே தான் போட்டி எனக் கூறி வருகிறேன்.. மாபெரும் மக்கள் சக்தி கொண்ட எளியோரின் குரலாக இருக்கும் தவெகவுக்கும், கொள்கை என்ற பெயரில் கொள்ளையடித்து மக்களை ஏமாற்றும் திமுகவுக்கும் தான் போட்டி. மக்களை ஏமாற்றும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா?. இல்லை மனசாட்சியுள்ள தவெகவின் மக்கள் ஆட்சி தரக்கூடிய தவெக ஆட்சி அமைக்க வேண்டுமா?
என் நண்பாக்களே, நண்பிகளே. தோழர்களே, தோழிகளே! என் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளீர்களா? என்னை இவ்வளவு நம்புகிறீர்களா? அப்படியென்றால், பார்த்துவிடலாம். ஒரு கை பார்த்துவிடலாம். சத்தியமாக சொல்கிறேன். 2, 3 வாரங்களுக்கு முன்பு கூட நான் ஏதேதோ நினைத்தேன். இப்போது சத்தியமாக, ஒரு கை பார்த்துவிடலாம் வாங்க. நம்பிக்கையோடு இருங்கள். வெற்றி நிச்சயம். இவ்வாறு விஜய் பேசினார்.