கோவை: “இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின் எங்கு சென்று பேசினாலும், ‘மதவாத கட்சி பாஜக’ என்று கூறுகிறார். அன்று பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தபோது ‘மதவாத கட்சி’ என்பது தெரியவில்லையா?” என்று முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தனது பிரச்சார பயணத்தை இன்று (ஜூலை 7) தொடங்கினார். மேட்டுப்பாளையம் பகுதியில் ரோடு ஷோவில் பங்கேற்ற அவர், பிரச்சார வேனில் நின்றவாறு பொதுமக்களிடையே பேசும்போது, “அதிமுக கூட்டணிக்கு மக்கள் அளிக்கும் ஆதரவு என்பது வெள்ளத்தில் நீந்தி வந்து பிரச்சாரம் செய்யும் அளவுக்கு உள்ளது.
கோவை மக்களின் இந்த ஆதரவை கண்டிருந்தால் முதல்வருக்கு கலக்கம் ஏற்பட்டிருக்கும். இதன் மூலம், வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும். தீய சக்தி திமுகவை அடுத்த ஆண்டு தேர்தலில் வீழ்த்துவோம், வெற்றி பெறுவோம். நல்லாட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வருவோம்.
கூட்டணிக்கு அதிமுகவை பாஜக அடிபணியச் செய்தது என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். அவருக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். இதே திமுக 1999-ம் ஆண்டு பாஜகவுடன் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்தது என்பதை அவ்வபோது அவர் மறந்துவிடுகிறார். அதேபோல், 2001 சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது என்பது வரலாறு.
திமுகவுடன் சேர்ந்தால், பாஜக நல்ல கட்சி. இதுவே, அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால், பாஜக மதவாத கட்சி. இதை தவிர வேறு ஒன்றும் தெரியாது. 2011-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு காலம், தமிழகத்தில் அதிமுக மிக சிறப்பான ஆட்சியைக் கொடுத்துள்ளது. இந்த 10 ஆண்டு ஆட்சியில் எங்களை குற்றம், குறை சொல்லி முதல்வரால் முழுமையாக எதிர்க்க முடியவில்லை.
இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின் எங்கு சென்று பேசினாலும், ‘மதவாத கட்சி பாஜக’ என்று கூறுகிறார். 1999-ம் ஆண்டு பாஜக மத்தியில் ஆட்சி அமைக்கும்போது, அவர்களது அவையில் அமைச்சர்களாக அமரும்போது ‘பாஜக மதவாத கட்சி’ என்பது தெரியவில்லையா? நாட்டு மக்களை இனியும் ஏமாற்ற முடியாது. இன்றை தினம் மத்தியில் பாஜக ஒரு வலுவான ஆட்சியை செய்து கொண்டிருக்கிறது. நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பெற்று இருக்கிறார்.
2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுடன் திமுகவுக்கு முடிவு கட்டப்படும். கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசு, தமிழகத்துக்காக எதுவுமே வழங்கவில்லை என்று கீறல் விழுந்த ரெக்கார்டர் மாதிரி சொன்னதையேச் செல்லிக்கொண்டு இருக்கிறார். சுமார் 16 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த கட்சியான திமுக, தமிழகத்துக்கு என்ன செய்தது? எந்தத் திட்டத்தை கொண்டு வந்தீர்கள்? என்ன நிதியை கொண்டு வந்தீர்கள்? ஒன்றுமே இல்லை.
திமுகவை பொறுத்தவரை குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும். அதன்மூலம் கொள்ளையடிக்க வேண்டும். இதுதான் திமுகவின் குறிக்கோள். இப்போது பேசும் முதல்வர் ஸ்டாலின், மத்தியில் 16 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது மக்களை பற்றி சிந்தித்தாரா? நீங்கள் சிந்தித்து இருந்தால், தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து இருக்கலாம். அதனை எல்லாம் விட்டு விட்டு, அதிமுக மீது குற்றம் சுமத்த எந்தக் குறையும் கண்டுபிடிக்க முடியாமல், ஏதேதோ தனக்கு தோன்றும் கருத்துகளை அவதூறு செய்திகளாக வெளியிட்டு திமுக வெற்றி பெற வைக்கலாம் என்று எண்ணுகிறார் முதல்வர் ஸ்டாலின். உங்களின் கனவு பலிக்காது. உங்களின் கனவு பகல் கனவாகவே போய்விடும்.
அதிமுகவின் 10 ஆண்டு ஆட்சிக் காலத்தில் மின் கட்டணம் உயர்வு இல்லை, வீட்டு வரி உயர்வு இல்லை, சிறு, குறு நடுத்தர தொழில்கள் சிறப்பாக செயல்பட்டன. அன்றைய தினம் மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். திமுக ஆட்சிக்கு வந்த முதலே தொடர்ந்து மின் கட்டணம், வீட்டு வரி உயர்த்தப்பட்டது. இதற்காகவா மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள்? வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்த கட்சி திமுக.
இன்றைய தினம் சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பெண்கள் நடமாட முடியாத நிலையில், எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை. பொம்மை முதல்வர் ஸ்டாலினால் இன்றைக்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து வயதினருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடிக்கிறது” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.