பாஜக உடனான கூட்டணியைப் பாதிக்கும் வகையில் பொதுவெளியில் விமர்சிக்கக் கூடாது என அதிமுக நிர்வாகிகளுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்கியுள்ளன. திமுக அரசை வீழ்த்துவதற்காக அதிமுகவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்று அதிமுக தொடர்ந்து கூறிவந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் திடீரென அதிமுக – பாஜக இடையே கூட்டணி உருவானது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. இதனால், இன்றளவும் அதிமுக – பாஜக கூட்டணி விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.
அதேநேரம், கூட்டணியைப் பலப்படுத்த அதிமுக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் உள்ளிட்டவற்றுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. இதற்கிடையே, தமிழகத்தில் 2026 தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி என அதிமுகவினரும், பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என பாஜகவினரும் கூட்டங்களில் பேசி வருகின்றனர். இதற்குப் பதில் அளிக்கும் வகையில் உள்ளூர் அளவில் அதிமுகவினர் பேசுவது, சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவுகிறது.
இந்நிலையில், பாஜகவுடனான கூட்டணிக்குப் பாதிப்பு வரும் வகையில் அதிமுகவினர் யாரும் விமர்சிக்க கூடாது என்று கட்சி நிர்வாகிகளுக்கு பழனிசாமி அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக நிர்வாகிகள் கூறும்போது, “பொதுச்செயலாளர் ஏற்கெனவே, கட்சி தொடர்பாகவும், கூட்டணி தொடர்பாகவும் யாரும் ஊடகங்களில் பேட்டி கொடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தி இருந்தார். அதனால்தான் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பேட்டிகூட இப்போது வருவதில்லை. கட்சியில் கீழ்மட்ட அளவில் சிலர் கூட்டணி தொடர்பாக பேசும் பேச்சுக்கள் பொதுச்செயலாளருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. அதனால்தான் கூட்டணிக்கு பாதிப்பு வரும் வகையில் யாரும் கருத்துகளை தெரிவிக்கவோ, விமர்சிக்கவோ கூடாது. எதுவாக இருந்தாலும் நான் பதில் சொல்லிக் கொள்கிறேன். வேறு யாரும் ஊடகங்களுக்கு பதில் அளிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்” என்றனர்.