கோவை: பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் தமிழ் மண்ணில் இடமில்லை என கோவையில் இன்று (ஜூன் 7) நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று (ஜூன் 7) கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிதியை மத்திய அரசு கொடுக்காமல், வேறு மாநிலங்களுக்கு நிதியை கொடுக்கின்றனர். இதற்கு மத்திய அமைச்சர் முருகன் பதில் தெரிவிக்க வேண்டும்.
தமிழக மக்களின் ரத்தம், வியர்வையை உறிஞ்சும் பாஜக அரசுப் பள்ளிக் கல்வி நிதி , பேரிடர் நிவாரண நிதி, தமிழக பங்களிப்பு நிதி போன்றவற்றை ஏன் கொடுக்கவில்லை? ஏன் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கின்றது. மக்களைப் பதற்றத்தோடும், அச்சத்தோடு வைத்திருக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ், பாஜக நினைக்கிறது. இதற்காகத் தான் முருகன் மாநாட்டை நடத்துகின்றனர். முருகன் மாநாட்டைக் குஜராத், உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற இடங்களில் நடத்தி இந்து கடவுள்களைச் சமமாக வைத்திருப்பதைக் காட்ட வேண்டும். வடமாநிலங்களைப் போல், தென் மாநிலத்தில் கலவரத்தைத் தூண்ட முடியுமா என அவர்கள் காத்திருக்கின்றனர்.
மறுசீரமைப்பு காரணமாகத் தென்மாநிலங்களில் உள்ள மாநிலங்கள் பாதிக்கப்படும். பாஜக விரும்பியதை போல மறுசீரமைப்பு செய்யப்பட்டால், தென் மாநிலத்தின் வாக்குகளே தேவையில்லை. தென் மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் தேவை இல்லை என்ற நிலை ஏற்படும். இதற்காகத் திட்டமிட்டு சதி வேலையில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி வராததை வருவதாக, பூச்சாண்டி கட்டுவதாக மறுசீரமைப்பு குறித்துப் பேசியிருக்கிறார். அப்படியானால் நாடாளுமன்றத்தில் எதற்காக ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இப்போது எம்.பிக்கள் 10 நிமிடத்திற்கு மேல் பேச முடிவதில்லை. எம்பிக்களின் எண்ணிக்கை உயர்ந்தால் இரண்டு நிமிடம் கூட நேரம் கிடைக்காது. இதெல்லாம் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு புரிகின்றதா? இல்லையா? அல்லது புரிந்துகொண்டு இப்படிப் பேசுகின்றாரா எனத் தெரியவில்லை.
மறுசீரமைப்பு பாஜக திட்டமிட்டது போல நடந்தால், தமிழக பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும். தென்னிந்தியப் பிரதிநிதித்துவம் குறைந்து போகும். வடமாநில பிரதிநிதித்துவம் உயரும் எனவும், வட மாநில பிரதிநிதிகளே அனைத்தையும் முடிவு செய்து கொள்வார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். புள்ளியியல் துறை மத்திய அரசிடம்தான் இருக்கிறது.
மத்திய அமைச்சர் அமித் ஷா வருகை மூலம் தமிழகத்தில் ஏதாவது குழப்பம் செய்யலாமா? கால் ஊன்றலாமா என பாஜகவினர் முயற்சி எடுத்துப் பார்க்கின்றனர். அவர்களின் எந்த திட்டமும் நிறைவேறாது. பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் தமிழ் மண்ணில் இடமில்லை” என்று அவர் கூறினார்.