சென்னை: தமிழக பாஜகவில் 25 அணிகளுக்கு அமைப்பாளர்களை நியமனம் செய்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். அவரது மகன் நயினார் பாலாஜிக்கும் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக பாஜகவில் கிளை அளவில் தொடங்கி மாவட்ட தலைவர்கள், மாநில தலைவர்கள், நிர்வாகிகள் நியமனம் முடிவடைந்துள்ளது.
இதன்தொடர்ச்சியாக, தற்போது, மாநில அணி பிரிவுகளுக்கு அமைப்பாளர்களை நியமனம் செய்து நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். அதில், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவுக்கு மாநில அமைப்பாளராக அவரது மகன் நயினார் பாலாஜியை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுதவிர 25 அணி பிரிவுகளுக்கு அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வழக்கறிஞர் பிரிவு மாநில அமைப்பாளராக குமரகுரு, அரசு தொடர்பு மற்றும் மத்திய நலத்திட்டங்கள் பிரிவு மாநில அமைப்பாளராக சூரிய நாராயணன், தேசிய மொழிகள் பிரிவு மாநில அமைப்பாளராக கே.பி.ஜெயக்குமார், ஆன்மிகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு அமைப்பாளராக கே.தாமோதர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், விருந்தோம்பல் பிரிவுக்கு கந்தவேல், ஜி.கே.சுரேஷ், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவுக்கு பாஸ்கரன், வசந்தராஜன், பிரச்சார பிரிவுக்கு பாண்டியராஜ், தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வளர்ச்சிப் பிரிவுக்கு அன்பழகன், தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவுக்கு அர்ஜுன மூர்த்தி, சங்கீதாரங்கராஜன், மருத்துவ பிரிவு-பிரேம்குமார், தொழிற்பிரிவு-பாலகிருஷ்ணன், மீனவர் பிரிவு-சீமா உட்பட 25 அணி பிரிவுகளுக்கு மாநில அமைப்பாளர்களை நியமித்து நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
திமுகவை எதிர்க்க வாரிசு அரசியலை கையில் எடுத்து, திமுகவை பாஜக தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நிலையில், தமிழக பாஜக தலைவரின் மகனுக்கு கட்சியில் புதிய பொறுப்பு கொடுக்கப்பட்டிருப்பது, பாஜகவிலும் வாரிசு அரசியல் புகுந்துவிட்டது என்பது போன்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கு நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘பாஜக யாருக்கும் உரிமையான கட்சி கிடையாது.
3 ஆண்டுகள் வரை நான் மாநில தலைவராக இக்கட்சியில் இருக்கலாம். அதன்பிறகு மாநில தலைவராக நான் தொடருவது குறித்து கட்சிதான் முடிவெடுக்கும். நான் பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பே, நயினார் பாலாஜி மாநில இளைஞர் அணி துணை தலைவராக இருந்தவர். திமுகதான் குடும்பக் கட்சி. அந்த கட்சியில் தான் வாரிசு அரசியல் இருக்க வேண்டுமா, கூடாதா என்பதை அவர்கள் முடிவெடுக்க வேண்டும்,’ என்றார்.