புதுச்சேரி: “புதுச்சேரியில் காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட உள்ளேன். பாஜகவில் போட்டியிட சீட் கேட்டுள்ளேன். அவர்கள் தந்தால் போட்டியிடுவேன். சீட் தராவிட்டால் சுயேட்சையாக களம் இறங்குவது பற்றி அப்போது முடிவு எடுப்பேன்.”என்று லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
‘ஆபரேஷன் சிந்தூர் ராயல் சல்யூட்’ பேரணியை புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லன் மார்ட்டின் துவக்கிவைத்தார். இப்பேரணி காமராஜர் தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தில் நிறைவடைந்தது. இந்நிகழ்வில் பாஜக எம்எல்ஏக்கள், பாஜக ஆதரவு எம்எல்ஏக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இருப்பினும், பாஜக தலைவர் மற்றும் பாஜக அமைச்சர்கள், நிர்வாகிகள் யாரும் பங்கேற்கவில்லை.
பேரணியில் கலந்துகொண்ட பின்னர் பேசிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், “புதுச்சேரியில் காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட உள்ளேன். பாஜகவில் போட்டியிட சீட் கேட்டுள்ளேன். அவர்கள் தந்தால் போட்டியிடுவேன். சீட் தராவிட்டால் சுயேட்சையாக களம் இறங்குவது பற்றி அப்போது முடிவு எடுப்பேன்.
வெளியூர்காரர்களை ஏற்பார்களா, இல்லையா என்பதைப் பற்றி மக்கள் தான் முடிவு எடுப்பார்கள்.
புதுச்சேரியில் வளர்ச்சிக்கு நிறைய வழிகள் உண்டு. இங்கு நிறைய செய்ய முடியும். அதை செய்யவில்லை. மாற்றத்தை கொண்டு வரவில்லை. உலகத் தரத்துக்கு புதுச்சேரி வர வாய்ப்பிருந்தும் கொண்டு வரவில்லை. இந்தப் பேரணியை அரசியல் சார்பற்று நடத்தியுள்ளோம். காமராஜர் தொகுதியில் நிற்பது உறுதி.” என்று கூறினார்.