மதுரை / பெரம்பலூர்: தவெக மாநாட்டில் இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரத்தில் கட்சித் தலைவர் விஜய் மற்றும் 10 பவுன்சர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கினர்.
மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் தவெக 2-வது மாநில மாநாடு கடந்த 21-ல் நடந்தது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். தொண்டர்கள், ரசிகர்களை விஜய் சந்திக்கும் வகையில் மேடையிலிருந்து 800 மீட்டர் நீளத்தில் ‘ரேம்ப் வாக்’ அமைக்கப்பட்டது. இந்நிலையில், அருகில் சென்று விஜயை பார்க்க முயன்ற பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் என்பவரை பவுன்சர்கள் குண்டுக்கட்டாக தூக்கி கீழே வீசியதாகவும், அவர் ‘ரேம்ப் வாக்’ பக்கவாட்டு கம்பியைபிடித்துத் தொங்கி உயிர் தப்பியதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், சரத்குமார், தனது தாயார் சந்தோசத்துடன் சென்று பெரம்பலூர் மாவட்ட கூடுதல் எஸ்.பி.யிடம் புகார் அளித்தார். அதில், “தலைவரைப் பார்த்த ஆர்வத்தில் நடைமேடையில் ஏறினேன். என்னைத் தாக்கும் நோக்கில் பவுன்சர்களில் ஒருவர் என்னை கீழே இறங்குமாறு அசிங்கமான வார்த்தையால் திட்டினார். மற்றொரு பவுன்சர் இடித்துத் தள்ளி தாக்கியதுடன், என்னை கீழே தூக்கி வீசினார். அதில் எனக்கு நெஞ்சுப் பகுதி, உடலில் உள்காயம் ஏற்பட்டுள்ளது. முதலுதவி சிகிச்சை அளிக்கக் கூட யாரும் முன்வரவில்லை. இதுபோன்று வேறு யாருக்கும் நடக்கக் கூடாது. தலைவர் விஜய் மீதும், சம்பந்தப்பட்ட பவுன்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்டம் குன்னம் போலீஸார் விஜய் மற்றும் 10 பவுன்சர்கள் மீது கும்பலாகச் சேர்ந்து தாக்கியது உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மாநாடு நடந்த இடம் மதுரை கூடக்கோவில் காவல் நிலைய எல்லை என்பதால், வழக்கு அந்த காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. தவெக தலைவர் விஜய் மற்றும் பவுன்சர்கள் 10 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து,விசாரணையைத் தொடங்கினர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சரத்குமார் விஜய் கட்சியைச் சேர்ந்தவரா? பவுன்சர்கள் தூக்கி வீசிய நபர் அவர் தானா? என்பது குறித்து வீடியோ உள்ளிட்ட ஆதாரங்களைக் கொண்டு முதலில் விசாரிக்கப்படும். இதற்குப் பின்னர் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும்” என்றனர்.
வாபஸ் பெற கோரி அழுத்தம்: இதற்கிடையே, பாதிக்கப்பட்ட சரத்குமார் தனது தயாருடன் மதுரை காவல் கண்காணிப்பாளர் அரவிந்தை சந்தித்து புகார் கொடுத்தார். அப்போது, அவரிடம் எஸ்.பி. விசாரணை நடத்தினார். பின்னர் சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தவெக தரப்பில் என் மீது புகார் அளித்தாலும், நான் சந்திக்கத் தயாராக உள்ளேன். எனக்கு எந்த கட்சியின் பின்புலமும் கிடையாது. இனிமேல் பிறருக்கு இதுபோன்று நடக்கக் கூடாது என்பதற்காகத்தான் புகார் அளித்தேன். புகாரைத் திரும்பப் பெறக்கோரி, அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து மிரட்டல் அழைப்புகள் வருகின்றன. மாநாட்டில் பங்கேற்ற நான், அரியலூரில் இருந்து ரயிலில் மதுரைக்கு வந்தேன். என்னைப் போன்ற ஒருவர், தான்தான் அந்த இளைஞர் என பொய்யான வீடியோ வெளியிட்டுள்ளார்” என்றார்.
சரத்குமார் அல்ல… தவெக பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சிவக்குமார் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மதுரை தவெக மாநாட்டில் பவுன்சர்கள் தூக்கி வீசியது, பெரம்பலூரைச் சேர்ந்த சரத்குமார் இல்லை. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் என்பவர்தான் தூக்கி வீசப்பட்டார். அவர் இதுகுறித்து யாரிடமும் புகார் அளிக்கவில்லை. தற்போது புகார் தெரிவித்துள்ள பெரம்பலூர் பெரியம்மாபாளையம் சரத்குமார், மாநாட்டுக்கே வரவில்லை. யாரோ ஒருவருடைய தூண்டுதலின்பேரில்தான் அவர் போலீஸில் பொய் புகார் அளித்துள்ளார். அதற்கான ஆடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது. இதன் பின்னணியில் ஆளும் கட்சியின் கைவரிசை உள்ளது. இந்த வழக்கை நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்போம்” என்றார்.