சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் 72 மணி நேர தொடர் உண்ணாவிரதம் சென்னையில் இன்று தொடங்கியது. இதில் 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பங்கேற்றுள்ளனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, ஓய்வூதிய திட்டம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள அலுவலர் குழுவை வாபஸ் பெறுவது, பணிக்கொடை மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்குவது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் 72 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டம் சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கியது.
சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜெயராஜராஜேஸ்வரன் தலைமையில் நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் ஆர்.தமிழ்செல்வி தொடங்கிவைத்தார். சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மு.செல்வக்குமார், பி.பிரடெரிக் எங்கெல்ஸ், மாநில நிதி காப்பாளர் சி.ஜான் லியோ சகாயராஜ் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினர். பல்வேறு அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர்.
இந்த தொடர் உண்ணாவிரத போராட்டம் குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் பி.பிரடெரிக் எங்கெல்ஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது, ” 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் பிரதான தேர்தல் வாக்குறுதிகளில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டமும் ஒன்று. ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுக்கு மேல் ஆகியும் இன்னும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. வாக்குறுதியை தள்ளிப்போடுவதற்காக குழுக்களை அமைக்கின்றனர்.
ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு மாறியுள்ளன. எனவே, திமுக அரசும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இதர மாநிலங்களைப் போன்று தமிழகத்திலும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.
மத்திய அரசு புதிதாக அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை காட்டிலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தினால் அரசுக்கு குறைந்த செலவுதான் ஏற்படும். எங்களின் கோரிக்கையை வலியுறுத்தி செப்டம்பரில் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தை நடத்த உள்ளோம்” என்றார். இந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வுபெற்றவர்கள் பங்கேற்றுள்ளனர்.