சென்னை: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்று 2-வது நாள் கருத்துகேட்பு கூட்டத்தில் 17 அரசு ஊழியர்- ஆசிரியர் சங்கங்கள் ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழுவிடம் மனு அளித்தனர். பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (யுபிஎஸ்) ஆகிய 3 விதமான ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் தமிழக அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது.
அந்த குழு தனது அறிக்கையை செப்.30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இக்குழு அரசு ஊழியர்- ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டறிந்து வருகிறது. அந்தவகையில் முதலாவது கருத்து கேட்பு கூட்டம் ஆக.18-ம்
தேதி தலைமைச் செயலகத்தில் நடந்தது. அதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்த தலைமைச் செயலக சங்கம் உள்பட 40 சங்கங்களின் நிர்வாகிகள் தங்கள் கருத்துகளை மனுவாக சமர்ப்பித்தனர். அப்போது அனைத்து சங்க நிர்வாகிகளுமே பழைய ஓய்வூதிய திட்டத்தையே கோரினர்.
இந்நிலையில், ககன்தீப் சிங் குழுவின் 2-வது கருத்துகேட்பு கூட்டம் நேற்றும் நடைபெற்றது. இதில் பங்கேற்க ஜாக்டோ-ஜியோ, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கம், நர்ஸ்கள் பொது நலசங்கம், தமிழக தமிழாசிரியர் சங்கம், தமிழக ஆசிரியர் கூட்டணி உள்பட 17 சங்கங்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.
அதன்படி அச்சங்கங்களின் நிர்வாகிகள் கருத்துகேட்பு கூட்டத்தில் பங்கேற்று தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர். மேலும் அதுதொடர்பான மனுக்களையும் சமர்ப்பித்தனர். மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று நேரடியாகவும் மனுக்கள் வாயிலாகவும் வலியுறுத்தியதாக ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கூறினர்.