சென்னை: தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் நடிகர் சரோஜாதேவி மறைவையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின்: தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் நடிகையான சரோஜாதேவி மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், ஜெமினி கணேசன் முதலிய உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் பல மறக்க முடியாத வெற்றிப் படங்களை அளித்தவர் சரோஜாதேவி.
தமது அழகிய முகபாவங்களாலும் நளினமான நடிப்பாலும் ‘அபிநய சரஸ்வதி’ எனப் புகழப்பட்டவர். நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும், கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா, உன்னை ஒன்று கேட்பேன், லவ் பேர்ட்ஸ், தொட்டால் பூ மலரும், ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என எத்தனையோ இனிய பாடல்களுக்குத் தமது நடிப்பால் பொலிவூட்டி தமிழ் மக்களின் நெஞ்சினில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் சரோஜாதேவி அம்மையார்.
சுமார் 200 திரைப்படங்களில் நடித்து, இந்தியத் திரையுலகிற்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக பத்மஸ்ரீ, பத்மபூஷன், இந்திய அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது என எண்ணற்ற பெருமைகளைப் பெற்றவர். எப்போதும் இனிய முகத்துடனும், கனிவான பேச்சுடனும் காணப்படும் சரோஜாதேவியின் மறைவு எளிதில் ஈடுசெய்ய முடியாதது. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எடப்பாடி பழனிசாமி: பழம்பெரும் திரைப்பட நடிகை, ‘அபிநய சரஸ்வதி’ என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் திருமதி சரோஜாதேவி காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பன்மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது தனித்துவமிக்க நடிப்பாற்றலால் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை சரோஜாதேவி. எம்.ஜி.ஆருடன், நடிகை சரோஜாதேவி இணைந்து நடித்த திரைப்படங்கள் யாவும் காலத்தால் அழியாப் புகழ் பெற்றவை. ‘சரோஜாதேவி’ எனும் பெயர் அப்படங்கள் வாயிலாக என்றென்றைக்கும் உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.
ஜெயலலிதாவின் பேரன்பைப் பெற்றிருந்த நடிகை சரோஜாதேவியை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத் துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
அன்புமணி ராமதாஸ்: தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் இன்று காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
தமிழ்த் திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான படங்களில் நடித்த சரோஜா தேவி கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் அனைத்துக் குடும்பங்களுக்கு நன்கு அறிமுகமானவர். மத்திய அரசின் பத்மபூஷன் மற்றும் தமிழக அரசு, ஆந்திர அரசு, கர்நாடக அரசால் வழங்கப்படும் ஏராளமான விருதுகளைப் பெற்றவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரேமலதா விஜயகாந்த்: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார் என்ற செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. கேப்டன் மீது பேரன்பும் மரியாதையும் கொண்டவர். கேப்டனுடன் இணைந்து பொன்மனச் செல்வன் திரைப்படத்தில் அம்மாவாக நடித்தவர். அனைவரிடமும் அன்போடும், பாசத்தோடும் பழகக் கூடியவர். கலை உலகில் அரசியாக வாழ்ந்தவர்.
அவரது இழப்பு திரை உலகிற்கே ஈடு இணையே இல்லாத இழப்பு, அவர் மறைந்தாலும் காலம் இருக்கும் வரை அவரின் புகழ் நிலைத்திருக்கும். தன்னுடைய நடிப்பு ஆற்றலால் அனைவரையும் கவர்ந்ததோடு தன்னுடைய திறமையையும் நிரூபித்தவர். சரோஜா தேவியின் மறைவு சினிமா உலகிற்கே பேரிழப்பு, அவருடைய ஆன்மா சாந்தியடையவும், அவரை இழந்து வாடும் திரையுலகத்தினருக்கும், குடும்பத்தாருக்கும் தேமுதிக சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.