மதுரை: மதுரையில் முகாமிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, மாநகராட்சி சொத்துவரி முறைகேடு விவகாரத்தில் மேயர் இந்திராணி பதவி விலகவும், அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கடும் விமர்சனம் செய்து வருவதால், சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில், மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் மேயர் பதவி பறிக்கப்படும் என திமுகவினரும், எதிர்க் கட்சியினரும் எதிர்பார்த்தனர். ஆனால், புதிய மேயர் தேர்வில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதி ஆகியோர் இடையே நீடிக்கும் கோஷ்டி பூசலால், தற்போது வரை மேயராக இந்திராணியே உள்ளார்.
தற்போது மேயருக்கு உள்ளூர் அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர் ஆதரவு, ஒத்துழைப்பு இல்லை. ஆனாலும், மேயர் தினமும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ஆனால், முன்புபோல அரசு நிகழ்ச்சிகளில் அவருக்கு முக்கியத் துவம் வழங்கப்படுவதில்லை.
இந்நிலையில் மதுரையில் கடந்த 3 நாட்களாக பிரச்சார பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநகராட்சி சொத்துவரி முறைகேடு பற்றியும், மேயர் பதவி விலக வேண்டும் என்றும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். ஆனால், திமுக தலைமை மவுனம் காப்பது உள்ளூர் கட்சியினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
திமுக மூத்த நிர் வாகிகள் கூறுகையில், ‘‘மேயரை பதவி நீக்க உள்ளூர் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் தடையாக இல்லை. ஆனால், புதிய மேயராக யாரை நியமிப்பது என்பதில் ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்காமல் உள்ளனர். இதனால் மேயரை தேர்வு செய்யும் பொறுப்பு அமைச்சர் கே.என். நேருவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் உள்ளூரில் கட்சியினரிடம் ஒற்றுமையின்மையால் மேயராக இந்திராணியையே நீடிக்க வைக் கலாம் என கட்சித் தலைமையிடம் கூறி வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேயருக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா? – சொத்துவரி முறைகேடு விவகாரத்தில் பதவிகளை இழந்த முன்னாள் மண்டலத் தலைவர்கள் கூறுகையில், ‘‘சொத்துவரி முறைகேட்டில் எங்களுக்கு தொடர்பில்லை என்பது தெரிந்த பிறகும் பறிக்கப்பட்ட பதவிகளை வாங்கி கொடுக்க யாரும் முயற்சிக்கவில்லை. இந்த விவகாரத்தில் மேயருக்கு ஒரு நியாயம். எங்களுக்கு ஒரு நியாயமா எனக் கேட்கத் தோன்றுகிறது என்றனர்.