நாகப்பட்டினம்: ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என்று பழனிசாமி பேசியதில், எந்த உள்நோக்கமும் இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். நாகை மாவட்டம் உத்தம சோழபுரத்தில் வெட்டாற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணைபணியை நிறுத்திவிட்டு, ஏற்கெனவே அறிவித்த பூதங்குடி பகுதியில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சார்பில் வாஞ்சூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்துப் பேசியதாவது: தமிழகத்தில் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பூதங்குடியில் கட்டவேண்டிய தடுப்பணையை உத்தமசோழபுரத்தில் கட்டுவதால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
2026-ல் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது பூதங்குடியிலேயே தடுப்பணை கட்டப்படும். மத்திய அரசால் விவசாயிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை தமிழக அரசு முறையாகப் பயன்படுத்துவதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தபோது, ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு “அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார்கள், பாஜகவினர் அதிமுகவை கபளீகரம் செய்துவிடுவார்கள் என திமுகவினர் கூறியதற்குதான், எதிர்க்கட்சித் தலைவர் அவ்வாறு பதில் அளித்துள்ளார்.
அதில் எந்த வித உள்நோக்கமும் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி தமிழகத்தில் அமையும். எந்தக் கட்சியின் ஆட்சி அமையும் என்பதை அப்போது அறிந்துகொள்ளலாம். 2026 தேர்தலில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது குறித்து ஊடகங்கள் கவலைப்பட வேண்டாம்” என்றார்.