நாகப்பட்டினம்: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கருத்து வெளியிட்டுள்ளதன் பின்னணியில் பாஜக உள்ளது என மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ, மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் எம்எல்ஏ ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாகையில் நேற்று நடைபெற்ற பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்துகொண்ட அவர்கள், பின்னர் செய்தியாளர்களை தனித்தனியாக சந்தித்தனர். இதில், ஜவாஹிருல்லா கூறியது: பாஜகவின் விசுவாசியாக இருப்பதில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி- செங்கோட்டையன் ஆகியோர் இடையே நடக்கும் போட்டிதான் இது.
பாஜகவுக்கு தனது விசுவாசத்தை காட்டுவதற்கு ஒரு இன்ச் மேலே நிற்கிறேன் என்று காட்டுவதாக செங்கோட்டையனின் கருத்துகள் அமைந்துள்ளன. பாஜகவுடன் அதிமுக எப்போது கூட்டணி வைத்ததோ, அன்றே ஜெயலலிதா, எம்ஜிஆர் அமைத்த திராவிட பாதையில் இருந்து அவர்கள் தடம் புரண்டுவிட்டனர் என தெரிவித்தார்.
தமிமுன் அன்சாரி கூறியபோது, ‘‘அதிமுகவை அழிக்க திட்டமிட்டுள்ள பாஜகவின் நாடகத்தில் ஒன்றுதான் செங்கோட்டையனின் இந்த நாடகமும். அதிமுகவில் உள்ள அனைவரையும் தனித்தனியாக பிரித்தது பாஜகதான். தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில், அதிமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்த செங்கோட்டையனை ஒரு ஆயுதமாக பாஜக கையில் எடுத்துள்ளது. செங்கோட்டையனின் இந்த முயற்சிக்கு பின்னால் நிச்சயமாக பாஜக உள்ளது. அதிமுக இதைப் பற்றி கவலைப்பட வேண்டும். தமிழகத்தின் நலன் கருதி ஒரு திராவிட கட்சி அழிந்து விடக்கூடாது என்பதால் இந்த கருத்தை சொல்கிறேன்” என்றார்.
ஆளூர் ஷாநவாஸ் கூறியபோது, “ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 8 ஆண்டுகளாக அதிமுகவில் நிகழ்வது அனைத்தையும் பாஜகதான் முடிவு செய்கிறது. பாஜகவின் தேவைக்காக பிரிக்கப்பட்ட அதிமுக, தற்போது பாஜகவின் தேவைக்காக சேர்க்கப்பட உள்ளது. 4 மாதங்களாக அமைதியாக இருந்த செங்கோட்டையன் மீண்டும் பிரச்சினையை எழுப்ப காரணம் என்ன?.
தாங்கள் சொல்வதை பழனிசாமி கேட்க வேண்டும் என பாஜக விரும்புகிறது. அதற்காக, டிடிவி.தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோரை வைத்து பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கிறது. அதிமுக ஒன்றாக வந்தாலும், கூட்டணியுடன் வந்தாலும் கொள்கை கூட்டணியான திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது. இனி அதிமுக ஒன்றிணைந்தாலும் தமிழகத்துக்கு பயன் கிடைக்காது” என்றார்.