அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி சுற்றுப்பயணத்தின்போது, தென் மாவட்டங்களை சேர்ந்த வர்த்தகர்கள், தொழில் முனைவோர்கள், தொழில் அதிபர்கள், ஆர்வமாக சந்தித்து தங்கள் குறைகளையும், பிரச்சனைகளை வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும் பகிர்ந்து வருகிறார்கள். மதுரையில் முக்கியமான சங்கங்கள் உள்ளிட்ட 87 சங்க நிர்வாகிகள் அவரை சந்தித்துள்ளதால், திமுக ஆட்சியில் கடந்த நான்கரை ஆண்டுகளாக அவர்கள் கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள் தீர்க்கப்படாததின் வெளிப்படா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி, கடந்த 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை மதுரை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து பிரச்சாரம் செய்தார். அவரது இந்த சுற்றுப்பயணத்தில் கட்சித்தொண்டர்கள், நிர்வாகிகள் அதிகளவு திரண்டனர். கட்சிக்கு அப்பார்ப்பட்டு பொதுமக்களும் கே.பழனிசாமியின் பேச்சை ஆர்வமாக நின்று கேட்டு சென்றனர். இந்த சுற்றுப்பயணத்தில் கே.பழனிசாமி, ஒவ்வொரு மாவட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த வணிகர்கள், தொழில் முனைவோர்கள், தொழில் அதிபர்கள், ஹோட்டல் சங்க நிர்வாகிகள், விவசாய சங்கத்தினர் உள்ளிட்டோரை சந்தித்தார்.
பொதுவாக ஆளும் கட்சியாக ஒரு கட்சி இருக்கும்போது, தொழில் நிறுவனங்கள் நடத்துவோர், வியாபாரம் செய்வோர் அக்கட்சியில் அதிகாரத்தில் இருப்பவர்களுடன் நெருக்கமாக இருப்பர். எதிர்கட்சித் தலைவரை சந்திக்கவே தயக்கம் காட்டுவார்கள். ஆனால், கே.பழனிசாமி சுற்றுப் பயணத்தில் மிக முக்கிய சங்கங்கள் உள்ளிட்ட அழைக்கப்பட்ட அனைத்து சங்கத்தினருமே பழனிசாமியை சந்தித்து தங்கள் குறைகளையும், எதிர்பார்ப்புகளையும் மனுவாக வழங்கி வருகின்றனர். கலந்துரையாடல் 2 மணி நேரத்திற்கு மேலாக நடக்கிறது.
மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த பழனிசாமியை, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், உணவு பொருள் வியபாரிகள், அக்ரி மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கம், வேளாண் வர்த்தகம் சங்கம், மடீட்சியா, ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட 87 வகையான சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கலந்துரையாடலில் 27 சங்க நிர்வாகிகள் தங்கள் குறைகள், எதிர்பார்ப்புகளை கே.பழனிசாமிடம் மனம் விட்டு உரையாடினர். பலர், தங்கள் சங்கங்கள் சார்பில் அறிக்கையாகவும், மனுவாகவும் அவரிடம் வழங்கினர். அவர் அதை வாங்கி அதிமுக ஆட்சி வந்ததும், உறுதியாக உங்கள் கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.
இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நிர்வாகிகள் செய்துள்ளனர். நேற்று திண்டுக்கல்லிலும் அதிமுக பொதுச்செயலாளர். கே.பழனிசாமியை 25க்கும் மேற்பட்ட அனைத்து வகை சங்க நிர்வாகிகள் சந்தித்தனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் கே.பழனிசாமி சுற்றுப் பயணத்தில் வியாபாரிகள், வர்த்தகர்கள், தொழில் முனைவோர்கள் பலரும் சந்திப்பதால் திமுக ஆட்சியில் சங்கத்தினரின் கோரிக்கைகளை அரசு செவி கொடுத்து கேட்கவில்லையா?, அவர்கள் குறைகளையும், எதிர்பார்ப்புகளையும் கடந்த நான்கரை ஆண்டுகளாக திமுக அரசு கேட்கவே இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில், ‘‘மாநகராட்சியில் சொத்துவரி உயர்வு, சாலைகள் வசதியின்மை, குடிநீரில் கழிவு நீர் கலப்பு, பாதாள சாக்கடை பிரச்சனை, சுகாதார சீர்கேடு போன்ற பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் மாநகராட்சி மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். ஆனால், இப்பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் இருந்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை. சங்கத்தினரை அழைத்து ஒருமுறை கூட ஆலோசனை கூட்டம் நடந்ததாக தெரியவில்லை. குறைகள் மீதும் உடனுக்குடன் தீர்வு என்பதே இல்லை. அமைச்சர்கள், மேயர், கவுன்சிலர்கள் ஆர்வம்காட்டாததுடன், அவர்களுடையான கோஷ்டிபூசலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விமான நிலைய விரிவாக்கத்தில் தாமதம், தென் மாவட்டங்களில் முக்கிய தொழில்கள் துவங்காமை, தூத்துக்குடி தொழில் வழித்தடம் அமைக்கப்படாதது, மதுரையை சுற்றி 2-ம் சுற்றுச்சாலை அமைப்பது என முக்கிய கொள்கை சார்ந்த திட்டங்களில் கூட பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. இந்த ஏமாற்றம்தான் பழனிசாமியை ஆர்வத்துடன் தொழில் துறையினரை சந்திக்க வைத்துள்ளது. திமுக அரசின் ஒட்டுமொத்த நிர்வாக தோல்வியையே இது காட்டுகிறது’ என்றனர்.
திமுகவினர் கூறுகையில், ‘திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதும் ஸ்டாலின் இதுபோன்ற முகாம்களை நடத்தினார். அப்போதும் பல்வேறு தொழில் சங்கங்கத்தினர் திரண்டுவந்து மனுக்களை அளித்தனர். இதனால் பழனிசாமியை சந்தித்ததில் முக்கியத்துவம் ஏதும் இல்லை. எனிவும் இந்த அதிருப்தியும், ஏமாற்றங்களும் சட்டசபை தேர்தல் நேரத்தில் வெளிப்பட்டுவிடாமல் தடுக்க மாவட்ட அமைச்சர்களும், அரசும்தான் முழுமையாக விசாரித்து அவர்களின் குறைகளை தீர்ப்பதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்’ என்றனர்.