திருப்பூர்: பழனிசாமியின் தலைமை வேண்டாம் என செங்கோட்டையன் அறிவிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகி புகழேந்தி கூறினார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ஒரு காலத்தில் செங்கோட்டையன் பின்னால் பழனிசாமி நடந்து கூட வரமாட்டார். ஓடித்தான் வருவார். தற்போது, தமிழகமே செங்கோட்டையன் ஏதோ செய்யப்போகிறார் என்று எதிர்பார்த்து உள்ளது. எனவே, தயவுசெய்து அவர் விளையாடக் கூடாது.
அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பூசி மெழுகக் கூடாது. பழனிசாமியின் தலைமையில் பயணம் செய்தால், செங்கோட்டையன் 7 முறை வெற்றி பெற்ற கோபிசெட்டிபாளையத்தில் மீண்டும் வெற்றி பெறமாட்டார். டெபாசிட் கூட கிடைக்காது. சர்வாதிகாரமாக செயல்பட்டு வரும் பழனிசாமியின் தலைமை வேண்டாம் என்று அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். எனவே, பழனிசாமியின் தலைமை வேண்டாம் என்று செங்கோட்டையன் அறிவிக்க வேண்டும்.
பழனிசாமி தலைமையில் அதிமுக தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும். டிடிவி.தினகரன் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதை வரவேற்கிறேன். ஏற்கெனவே ஓ.பன்னீர்செல்வம் வெளியேறிவிட்டார். பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, இனி அக்கட்சியில் தொடரப் போவதில்லை என்றே கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.