இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் மாநிலச் செயலாளர் முத்தரசன் குறித்து பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நாவடக்கம் தேவை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வெளியிட்ட அறிக்கையில், “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மூளையில் சிந்தித்து அரசியல் முழக்கங்களை உருவாக்க முடியாமல், கடந்த 2021ம் ஆண்டுக்கு முன்னர், அதிமுக ஆட்சி ஊழல் புதை சேற்றில் மூழ்கி, பாஜக மத்திய அரசின் கொட்டடியில் அடைக்கப்பட்ட அடிமையாக இருந்தபோது, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி முன்வைத்த ‘தமிழகத்தை மீட்போம்’ என்ற அரசியல் முழக்கத்தை இன்று காலப் பொருத்தம் இல்லாமல் முழங்கி வருகிறார்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை எப்படியாவது பிரித்து விட முடியாதா என படாத பாடுபட்டு வரும் நாக்பூர் குரு பீடத்தின் சிஷ்யர்கள் வீட்டு அடிமைச் சேவகர் எடிப்பாடி பழனிசாமி, முயற்சியில் தோல்வியை தழுவி சித்தம் கலங்கி, ஊர் முனைகளில் உளறி வருகிறார். இவரது கட்சியின் நிறுவனத் தலைவருக்கு, அரசியல் தளத்தில் களம் அமைத்து, நிரந்தர முகவரி பெற்று தந்தது இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி என்பதை அவர், வாழ்நாள் முழுவதும் பெருமை பட கூறி வந்தார் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிந்த வரலாற்று உண்மை.
பாரதிய ஜனதா கட்சியோடு, இனி எந்தக் காலத்திலும் அதிமுக கூட்டணி அமைக்காது என பெருந்திரளாக கூடிய, மக்கள் மன்றத்தில் உறுதி அளித்த, இவரது குலவிளக்கு மறைந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வார்த்தை களை குப்பைத் தொட்டியில் வீசி விட்டு, மோடி – ஷா கூட்டணிக்கு கூழைக் கும்பிடு போட்டு ஓடியது யார் என்பதை நாடு மறந்துவிடவில்லை.
தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் ஜிஎஸ்டி வரி, உணவு பாதுகாப்புச் சட்டம், உதய் மின் திட்டம் எல்லவற்றையும் உறுதியாக எதிர்த்து குரல் கொடுத்த ஜெயலலிதா சமாதியின் ஈரம் காயும் முன்பு, இடுப்பில் துண்டு கட்டி, வாய் முடி, மத்திய அரசு நீட்டிய தாள்களில் எல்லாம் கையெழுத்து போட்டு, தமிழகத்தை வஞ்சித்து, மக்களுக்கு துரோகம் இழைத்த எடப்பாடி பழனிசாமி, உரிமைக்காக போராடும் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் அதன் மாநிலச் செயலாளர் முத்தரசன் பற்றி பேசுவதற்கு தகுதிபடைத்தவரா என்பதை ஆயிரம் முறை யோசிக்க வேண்டும்.
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் முகவரி இழப்பது யார் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்பதை சுட்டிக் காட்டி, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நாவடக்கம் தேவை என்பதை காலத்தில் எச்சரிக்கிறோம்’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கோவையில் பிரச்சாரத்தின்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தேய்ந்து வரும் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறதா, இல்லையா என்ற நிலை உள்ளது. அதன் செயலாளர் முத்தரசன், ஸ்டாலினுக்கு அடிமையாக இருந்து அடிக்கடி குரல் கொடுக்கிறார். தமிழகத்தை மீட்போம் என்றால் எப்படி எனக் கேட்கிறார்.
தேர்தல் மூலமாகத்தான் தமிழகத்தை மீட்போம். மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்க முடியாத அரசாக ஸ்டாலின் அரசு உள்ளது. தமிழ்நாடு ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளது. அதிலிருந்து மீட்பதுதான் எங்கள் லட்சியம்” என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.