ஈரோடு: “பழனிசாமிக்கு அதிமுக சொந்தமில்லை என்பதை நீதிமன்றமும், மக்கள் மன்றமும் சொல்லவுள்ளது” என்று செங்கோட்டையனை சந்தித்த பெங்களூரு புகழேந்தி தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சார்ந்த பெங்களூரு புகழேந்தி இன்று நேரில் சந்தித்தார். தொடர்ந்து இருவரும் நீண்ட நேரம் உரையாடினர். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பெங்களூரு புகழேந்தி கூறியது: “கட்சியை நாசம் செய்யும் பணியில் இபிஎஸ் ஈடுபட்டுள்ளார். இந்தச் சூழ்நிலையை மக்களும், தொண்டர்களும் ஏற்கவில்லை. கட்சியை ஒருங்கிணைக்காவிட்டால், அதிமுக 4-ம் இடத்துக்குச் சென்று விடும். நாம் தமிழர் கட்சியோடுதான் போட்டி போட வேண்டும்.
நான்கரை ஆண்டுகளாக ஊழல் செய்தவர்கள் மற்றும் கொடநாடு கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்ட அனைவரும் இணைந்து செயல்பட உள்ளோம். நாங்கள்தான் உண்மையான அதிமுக. இந்தக் கட்சி பழனிசாமிக்கு சொந்தமில்லை என்பதை நீதிமன்றமும், மக்கள் மன்றமும் சொல்லவுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே, கோபி தொகுதியில் அதிமுகவின் பல்வேறு பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள் தங்களது ராஜினாமா கடிதத்தை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ் கருத்து: முன்னதாக, போடியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “அதிமுகவின் மூத்த முன்னோடி செங்கோட்டையன். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர வேண்டும் என கூறினார். இதற்காக அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டுமா என்று தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரும் கேட்கிறார்கள். செங்கோட்டையன் நீக்கப்பட்டது சர்வாதிகாரத்தின் உச்ச நிலை. இதற்கு மக்கள் பாடம் புகட்டுவர்
கழகத்தில் உள்ளவர்கள் பிரிந்ததிலிருந்து தொடர் தோல்வி அதிமுகவுக்கு ஏற்பட்டு வருகிறது. 11 தேர்தலில் அதிமுக தோல்வி கண்டுள்ளது. இந்த தொடர் தோல்வி தேவைதானா என்பது மக்களின் கேள்வியாக உள்ளது. இந்த தோல்வியிலிருந்து விடுபட வேண்டும் என்றால், பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பது ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பம்” என்று கூறினார்.