பழநி: பழநி கோயில் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவின் கருத்துக்கு, பழநி கோயில் கல்வி நிறுவனங்களின் துணை ஆணையர் வெங்கடேஷ் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசும்போது, “பழநி கோயில் நிதியில் கட்டிய கல்லூரியில் எப்படி முஸ்லிம் ஆசிரியர்களை நியமிக்க முடியும்?” என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு, பழநி கோயில் கல்வி நிறுவனங்களின் துணை ஆணையர் வெங்கடேஷ் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா கூறியது முற்றிலும் பொய்யான தகவல். பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களில் இந்து மதத்தைச் சாராத, மாற்று மதத்தைச் சேர்ந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் எவரும் பணியாற்ற வில்லை. பழநி கோயில் சார்பில் நடத்தப்படும் கல்லூரியில் முஸ்லிம் மதத்தைச் சார்ந்தவர் நியமிக்கப்படுவதாகக் கூறுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தியாகும்” என்று வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.