பழநி: பழநியில் ரூ.1.22 கோடி செலவில் ‘ஹைடெக்’ பஞ்சாமிர்தம் விற்பனை நிலையத்தை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை திறந்து வைத்தார்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. மேலும், அபிஷேக பஞ்சாமிர்தம் அரைக் கிலோ டப்பா ரூ.40-க்கும், டின் ரூ.45-க்கும், 200 கிராம் டப்பா ரூ.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதற்காக, பழநி மலைக்கோயில், சுற்றுலா பேருந்து நிலையம் உட்பட 10 இடங்களில் ஸ்டால் அமைக்கப்பட்டு பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப் படுகிறது. தமிழகத்தில் உள்ள கோயிலில் வழங்கப்படும் பிரசாத்துக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது பழநி கோயில் பஞ்சாமிர்தத்துக்கு மட்டுமே.
பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக ரூ.99.98 கோடியில் பெருந்திட்ட வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பழநி மேற்கு கிரிவீதியில் மின் இழுவை ரயில் (வின்ச்) நிலையம் மற்றும் அதன் எதிரில் ரூ.1.22 கோடி செலவில் குளிர்சாதன வசதியுடன் கூடிய ‘ஹைடெக்’ பஞ்சாமிர்தம் விற்பனை நிலையம் கட்டப்பட்டுள்ளது.
அதனை, முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை (ஆக.22) இன்று காலை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, பழநியில் நடந்த நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், அறங்காவலர் குழு உறுப்பினர் பாலசுப்பிரமணி ஆகியோர் பஞ்சாமிர்த விற்பனையை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் செயற்பொறியாளர் பாலு, உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல், பழநி அடுத்த சிவகிரிபட்டி ஊராட்சி தட்டான்குளத்தில் தேவஸ்தானம் சார்பில் சித்த மருத்துவ கல்லூரி கட்டப்பட உள்ள 38 ஏக்கர் நிலத்தை சுற்றிலும் ரூ.2.40 கோடி செலவில் சுற்றுச்சுவர் கட்டும் பணியை, முதல்வர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வுகளில் உதவி ஆணையர் லட்சுமி, பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.