சென்னை: பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கையால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மலையாளத் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு ‘ப’ வடிவிலான இருக்கைகள் கொண்ட வகுப்பறைகளை தென் மாநிலங்கள் உருவாக்கி வருகின்றன. இதற்கான உத்தரவை தமிழக அரசும் சமீபத்தில் பிறப்பித்துள்ளது.
வகுப்பறைகளில் கடைசி இருக்கை என்கிற கோட்பாட்டை ஒழிக்கும் வகையிலும், மாணவ, மாணவியரிடையே சம வாய்ப்பு அளிக்கும் பொருட்டும் ‘ப’ வடிவிலான இருக்கை திட்டத்தை தமிழ்நாடு கொண்டு வந்திருக்கிறது. இருப்பினும், இதில் உள்ள பாதக அம்சங்களை ஆராய்வது அரசின் கடமை.
‘ப’ வடிவிலான இருக்கைகள் அமைக்கப்படுவதன் காரணமாக மாணவ, மாணவியர் கழுத்தை நேரடியாக வைத்து கரும்பலகையை பார்க்க முடியாமல், கழுத்தை நீண்ட நேரம் ஒருபுறமாக வைத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதன் காரணமாக தசைக்கூட்டு மற்றும் எலும்பியல் பாதிப்புகள், குறிப்பாக 10 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு ஏற்படும். ஆசிரியர்களும் தங்கள் கழுத்தை இரு பக்கமும் திருப்பி மாணவ மாணவியருக்கு கற்பிக்க வேண்டியிருப்பதால், அவர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படும். ஆசிரியர்களுக்கு மிக தொலைவில் அமர்ந்து இருக்கும் மாணவ மாணவியருக்கு ஆசிரியர்கள் கற்பிப்பது காதில் விழாத நிலை ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், ‘ப’ வடிவிலான இருக்கைகள் அமைக்கப்பட்டால், தூரத்திலிருந்து பார்க்கும் அவசியம் மிகவும் குறைவாக உள்ள மாணவ, மாணவியருக்கு ஒளி விலகல் பிழைகள் கவனிக்கப்படாத நிலை ஏற்படும். தற்போது நடைமுறையில் உள்ள இருக்கைகளில், பின் வரிசையில் அமர்ந்திருக்கும் குழந்தைகள் கரும்பலகையில் இருப்பதை படிக்க சிரமப்பட்டால், முன்கூட்டியே கண் பரிசோதனை செய்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்றும் கண் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மொத்தத்தில், திரை அரங்குகளில் உள்ள இருக்கைகள் முறை மிகவும் பொருத்தமானது என்றும், இதன் மூலம் சிறந்த தெரிவு நிலை ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் இறுக்கம் வெகுவாக குறையும் என்பதுதான் மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.
எனவே முதல்வர் ஸ்டாலின் இதில் உடனடி கவனம் செலுத்தி, ஆரோக்கியமான கல்வியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, கண் மருத்துவர்கள், குழந்தை நல மருத்துவர்கள் ஆகியோரை கலந்து ஆலோசித்து இருக்கைகள் குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும்’ இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.