சென்னை/மேட்டூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மேட்டூரிலிருந்து சென்னை வரை அரசு மருத்துவர்கள் பாதயாத்திரையை தொடங்கினர்.
மேட்டூர் அருகே விருதாசம்பட்டியை அடுத்த மல்லப்பனூர் பிரிவு சாலையில், மறைந்த மருத்துவர் லட்சுமி நரசிம்மனின் நினைவிடத்தில் இருந்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் பெருமாள் பிள்ளை தலைமையில் மேட்டூரிலிருந்து சென்னை வரை பாதயாத்திரை நேற்று தொடங்கியது. செயலாளர் ஜெயக்குமார் மற்றும் மருத்துவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும். அரசு மருத்துவர்களுக்கான அரசாணை 354-ன் படி 12 ஆண்டுகளில் ஊதிய பட்டை 4 தரப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பெருமாள் பிள்ளை கூறியதாவது: நாடு முழுவதும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான ஊதியத்தை அரசு மருத்துவர்களுக்கு தர வேண்டும். அரசாணை 354-ன் படி அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றமே அரசுக்கு உத்தரவிட்ட பிறகும் மருத்துவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும் அரசு மருத்துவர்களின் ஊதிய கோரிக்கை நிறைவேற்றப்படும் என 2019-ம் ஆண்டு போராட்டத்தின் போது, தற்போதுள்ள தமிழக முதல்வர் போராட்டக்களத்தில் நேரில் வந்து உறுதி அளித்தார்.
இந்த போராட்டத்தின் காரணமாக எங்கள் தலைவர் லட்சுமி நரசிம்மனை இழக்க நேரிட்டது மிகவும் வேதனைக்குரியது. இத்தனை இடர்பாடுகள் ஏற்பட்ட பிறகும் தமிழக அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமலும், முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணையை, இன்றைய முதல்வர், துணை முதல்வர் ஆட்சியில் இருக்கும் நிலையிலும் ரத்து செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.