ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துள்ள திமுக, தனது கூட்டணியையும் கட்டுக்கோப்பாக வைத்து 2026 தேர்தலை எதிர்நோக்கியுள்ளது. ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தற்போது வரை பலமான கூட்டணியை அமைக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே இருக்கும் நிலையில், தமிழகத்தில் அரசியல் கணக்குகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கிறது. திமுக தனது கூட்டணியை தொடர்ந்து பலப்படுத்திக் கொண்டே வருகிறது. தொகுதி பங்கீடு தொடர்பாக அவ்வப்போது சில பிணக்குகள் ஏற்பட்டாலும், ஏதோ ஒரு வழியில் கூட்டணி கட்சிகளை சரிகட்சி வைத்திருக்கிறது திமுக. அதுமட்டுமின்றி பாமக, தேமுதிக, ஓபிஎஸ் என புதியவர்களை கூட்டணிக்குள் கொண்டுவரவும் காய்நகர்த்தல்களில் ஈடுபட்டுள்ளது.
ஆனால், திமுகவை ஆட்சியை விட்டு அகற்றவேண்டும் என்ற இலக்கோடு களமிறங்கியிருக்கும் அதிமுகவால் இப்போதுவரை பலமான கூட்டணியை உருவாக்க முடியவில்லை. இதுகுறித்து பதில் சொன்ன எடப்பாடி பழனிசாமி, “எங்கள் கூட்டணியில் பாஜக இருக்கிறது. பாஜகவோடு பல கட்சிகள் கூட்ட்ணியில் இருக்கிறது” என்று அசரடித்தார். அவர் சொன்னது உண்மைதான். அதிமுக கூட்டணியில் இப்போது பாஜகவை தவிர யாரும் இல்லை. பாஜக கூட்டணியில்தான் தமாகா, அமமுக, ஐஜேகே, ஏசி சண்முகம் கட்சி போன்றவை உள்ளன. அவற்றில் அமமுக போன்ற சில கட்சிகள் அதிமுக – பாஜக அணியில் தொடர்வதில் ஊசலாட்டத்தில் உள்ளன.
பலமான கூட்டணியை உருவாக்க இபிஎஸ் எடுக்கும் முயற்சி என்ன?
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை உருவாக்க வேண்டுமானால் பலமான கூட்டணியை அமைப்பது முக்கியமானது. ஏனென்றால் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஜனரஞ்சக தலைவர்களும்கூட பலமான கூட்டணியை கட்டமைத்தே ஆட்சி மாற்றம் கண்டார்கள். தமிழகத்தில் எம்ஜிஆரின் மறைவுக்குப் பின்னர் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. விதிவிலக்காக 2011 மற்றும் 2016ல் ஜெயலலிதா தொடர்ந்து ஆட்சியை பிடித்து சாதித்து காட்டினார்.
ஜெயலலிதா பாணியில் தொடர்ந்து 2-ஆம் முறையாக 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற திட்டம் தீட்டி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், எப்படியாவது ஆட்சி மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதனால்தான் திமுகவை எதிர்ப்பவர்கள் எல்லாம் எங்கள் கூட்டணிக்கு வாருங்கள் என அழைப்பு விடுத்து வருகிறார்.
தவெக, நாம் தமிழர் போன்ற கட்சிகளுக்கு இபிஎஸ் விடுத்த அழைப்பை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. ஏற்கெனவே அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் கூட இதுவரை எந்த முடிவையும் சொல்லவில்லை. குடும்ப சண்டையில் சிக்கித் தவிக்கும் பாமக இப்போது கூட்டணி குறித்து முடிவெடுப்பது சிரமம்தான். அதேபோல தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவும் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துவிட்டார். இவர்களெல்லாம் தேர்தல் நெருக்கத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு சொல்வார்கள்.
புதிய கூட்டணியை அமைப்பது அடுத்த விவகாரம் என்றாலும், இருக்கும் கூட்டணியை அதிமுக – பாஜக தக்கவைக்குமா என்பதே கேள்விக்குறியாகி இருக்கிறது. ஏனென்றால் பாஜகவில் பசை போட்டு ஒட்டிக்கொண்டிருந்த பன்னீர்செல்வமே கோபப்பட்டு கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டார். இதே நிலை நீடித்தால் அமமுகவும் கூட்டணியை விட்டு விலகும் சூழல் உருவாகும்.
இருமுனைப் போட்டி என்ற நிலையும் இப்போது இல்லை. தமிழகம் 2026 தேர்தலில் திமுக+, அதிமுக+, தவெக+, நாதக என நான்கு முனைப் போட்டியை காணவிருக்கிறது. எனவே, அதிமுகவில் சேர விருப்பமில்லாத அரசியல் கட்சிகளுக்கு தவெக எனும் புதிய ஆப்சனும் தயாராக இருக்கிறது.
இன்னொரு பக்கம், அதிமுகவை பலவீனப்படுத்த அக்கூட்டணியில் இருக்கும் கட்சிகளை தவெக பக்கம் தள்ளவும், தனித்துப் போட்டியிட வைக்கவும் சகல விதங்களிலும் திமுக முயற்சி எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக ஒரு பெரிய டீமே களமிறங்கியுள்ளது.
‘2026-ல் நிச்சயம் வெற்றி என்ற மனநிலைக்கே திமுக வந்துவிட்டது. ஆனால் தனது சுற்றுப்பயணத்துக்கு வந்த கூட்டத்தை பார்த்து, அதீத தன்னம்பிக்கைக்கு இபிஎஸ் சென்றுவிட்டாரோ என்று தோன்றுகிறது. அசைந்து கொடுக்காத நபரான ஜெயலலிதா கூட தன்னை கடுமையான விமர்சித்த கட்சிகளையும், நபர்களையும் கூட்டணிக்கு கொண்டுவந்து பலமுறை வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் வெற்றி வேண்டுமானால் கூட்டணியில் ஒவ்வொருவரும் முக்கியம். அதனை உணராத காரணத்தால்தான் வலுவான கூட்டணி அமைக்க முடியாமல் அதிமுக தடுமாறுகிறது’ என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
‘தேர்தலுக்கு இன்னும் 8 மாதம் இருக்கிறது. அதற்குள் பல்வேறு மாற்றங்கள் நடக்கும், வலுவான கூட்டணி அமைப்போம்’ என தொடர்ந்து சொல்லி வருகிறார் இபிஎஸ். அவரது வார்த்தை பலிக்குமா எனப் பார்ப்போம்.