திருவண்ணாமலை: சென்னையில் இருந்து ஆன்மிகச் சுற்றுலா சென்ற குழுவினர் பருவதமலையில் இருந்து கீழே இறங்கியபோது, மழை வெள்ளத்தில் சிக்கி 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவ மங்கலம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மல்லிகார்ஜுனர் மற்றும் பிரம்மாம்பிகை கோயில் 4,560 அடி உயரமுள்ள பருவத மலையில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு நேற்று முன்தினம் அதிகாலை சென்னை திருவேற்காடு பகுதியிலிருந்து 15 பேர் வாகனத்தில் வந்துள்ளனர்.
இவர்கள், மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் முடித்துவிட்டு நேற்று முன்தினம் மாலை கீழே இறங்கி வந்துள்ளனர். ஓடையை கடக்க முயற்சி இந்நிலையில், அன்றைய தினம் பெய்த கனமழையினால் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. குறிப்பாக, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஓடையில் மழைவெள்ளம் அதிக அளவில் பெருக்கெடுத்து ஓடியுள்ளது.
இதைக் கடந்துதான் வெளியே வர முடியும். எனவே, அனைவரும் ஒருவருக்கு ஒருவர் கைகளை கோத்துக்கொண்டு ஓடையைக் கடக்க முயன்றுள்ளனர். அப்போது, சென்னை வடபழனியைச் சேர்ந்த ராஜியின் மகள்சங்கத்தமிழ்(36), திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த மனோகரனின் மனைவி இந்திரா(58) ஆகிய இருவரும் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தேடும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுதாகர், வருவாய்த் துறையினர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டனர்.
நேற்று முன்தினம் இரவு வரை பெண்களின் உடல்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் நேற்று காலை சம்பவ இடத்துக்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்களின் உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் மழை வெள்ளம் சென்ற பாதையில் இந்திராவின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
அதைத் தொடர்ந்து, சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள கோயில்மாதிமங்கலம் கிராமத்தில் உள்ள ஏரி அருகில் சங்கத்தமிழின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். இரண்டு உடல்களையும் கைப்பற்றிய போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.