மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழாவையொட்டி, புதுக்கோட்டையில் மாவட்ட திமுக அலுவலகம் அருகே வைக்கப் பட்டிருந்த ‘மாநகர திமுக போராடும், மாநகர திமுக வெல்லும்’, ‘பரிதவிப்போர் இங்கே, பரிந்துரைத்தவர் எங்கே?’ என்ற வாசகங்களுடன் வைக்கப்பட்ட பேனர் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை திமுக மாநகர செயலாளராக இருந்த செந்தில் கடந்த ஆண்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்கு அக்கட்சியில் பலரும் முயற்சித்து வந்தனர். இதற்காக பலர் வட்டச் செயலாளர்கள், பிரதிநிதிகளை சந்தித்து ஆதரவும் திரட்டினர். இதில், செந்தில் மகன் கணேஷூக்கு அந்தப் பதவியை வழங்க வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், ராஜேஷ் என்பவருக்கு கடந்த மார்ச் மாதம் மாநகர செயலாளர் பொறுப்பை கட்சி தலைமை வழங்கியது.
மாநிலங்களை உறுப்பினர் எம்.எம். அப்துல்லாவின் பரிந்துரையின்பேரில் ராஜேஷ் நியமிக்கப்பட்டதாகக் கூறி, அதற்கு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இதைக் கண்டித்து, திமுக மாவட்ட அலுவலகம் முன் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, கட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். சென்னை சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும் நேரில் சந்தித்து முறையிட்டனர். எனினும், எந்த மாற்றமும் நடைபெறவில்லை.
இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகம் அருகே வட்டச் செயலாளர்கள் சிலர், தங்களது புகைப்படம், வார்டு எண் ஆகியவற்றுடன் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். அதில், ‘மாநகர திமுக போராடும், மாநகர திமுக வெல்லும்’, ‘பரிதவிப்போர் இங்கே, பரிந்துரைத்தவர் எங்கே?’ என்ற வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.
மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுவரையறைக்கு எதிராக ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி வரும் நிலையில், புதுக்கோட்டையில் திமுகவினர் வைத்துள்ள பேனரில், மாநகர திமுக செயலாளர் நியமனத்துக்கு எதிராக ‘மாநகர திமுக போராடும், மாநகர திமுக வெல்லும்’ என்ற வாசகங்களுடன் வைக்கப்பட்டுள்ள பேனர் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பேனர் விவகாரத்தால், திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டுவிடாமல் இருப்பதற்காக அந்தப் பகுதியில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதேபோல, புதுக்கோட்டையில் கடந்த மாதம் திமுக முதன்மைச் செயலாளரும், மண்டலப் பொறுப்பாளரும், அமைச்சருமான கே.என்.நேரு நடத்திய கூட்டம், அதன்பிறகு புதுக்கோட்டைக்கு துணை முதல்வர் உதயநிதி வருகை ஆகியவற்றின் போது இந்த விவகாரம் குறித்து கட்சியினர் கேள்வி எழுப்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.