Last Updated : 12 Jun, 2025 12:48 PM
Published : 12 Jun 2025 12:48 PM
Last Updated : 12 Jun 2025 12:48 PM

மேலக்கோட்டையூர் ஊராட்சிக்கு உட்பட்ட காவலர் குடியிருப்பு அருகே உள்ள பூங்காவை பராமரித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் மேலக்கோட்டையூர் ஊராட்சி காவலர் குடியிருப்பு அருகே சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் பயன்பாட்டில் இருந்து வந்த இந்த சிறுவர் பூங்காவில், நாளடைவில் முறையான பராமரிப்பு இல்லாமல் போனது. போதிய பாதுகாப்பு வசதி இல்லாத காரணத்தால், பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
தற்போது பூங்காவில் முட்புதர்கள் வளர்ந்து காடுபோல் உள்ளது. பெரும்பாலான விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளன. பராமரிப்பின்றி இருப்பதால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வயதானோர் நடைபயிற்சி செய்யும் பாதை முழுவதும் புதர் மண்டி கிடக்கிறது. பூங்காவை முறையாக பராமரிக்காததால் சிறுவர்கள் விளையாடக்கூடிய அனைத்து உபகரணங்களும் துருப்பிடித்து, உடைந்து, பாழடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
இதனால் பூங்காவுக்கு வந்து சிறுவர்கள் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் செடிகள் முளைத்து புதர்போல் உள்ளதால், நடைபாதையை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே பயன்பாடற்ற நிலையில் காணப்படும் பூங்காவில் சிறுவர்கள் விளையாடக்கூடிய அனைத்து உபகரணங்களையும் புதுப்பித்து, பூங்காவை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த குமாரி என்பவர் கூறியதாவது: விடுமுறையில் சிறுவர்கள் நகரில் உள்ள பூங்காக்களுக்குச் சென்று விளையாடுவது வழக்கம். காவலர் குடியிருப்பு அருகில் சிறுவர் பூங்கா சிதிலமடைந்து விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளன. பூங்கா பயன்பாடின்றி உள்ளதால் கோடை விடுமுறையை கழிக்க சிறுவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ஒரு காலத்தில் விடுமுறை நாட்களில் சிறுவர்கள் என அனைவரும் இங்கு சென்று விளையாடி மகிழ்ந்து பொழுதை கழித்தனர். இன்று நிலைமை வேறுமாதிரியாக உள்ளது.
இந்த பூங்காவை முறையாக பராமரிக்காததால், செடிகள் வளர்ந்து புதராக காணப்படுகிறது. இதனால், குழந்தைகள் அச்சத்துடன் விளையாடி வருகின்றனர். மேலும், மாலை நேரத்தில் போதிய விளக்கு வெளிச்சம் இல்லாமல் இருளில் மூழ்கி உள்ளது. பூங்காவை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சிக்கு போதிய வருவாய் இருந்தும் பூங்காக்களை பராமரிப்பது இல்லை. ஊராட்சியில் ஏராளமான தொழிற்சாலைகளும் உள்ளது. சமூக பொறுப்பு நிதியின் கீழ் பூங்காவை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
FOLLOW US
தவறவிடாதீர்!